9 மாவட்டங்களுக்கு இரு கட்ட தேர்தலா?.. அதிமுக, பாமக கிளறிய சந்தேகங்கள்!

Author: Udhayakumar Raman
16 September 2021, 10:51 pm
Quick Share

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடந்த நிலையில் மாவட்டங்கள் மறுசீரமைப்பு, வார்டு வரையறை பணிகள் காரணமாக அப்போது இந்த 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.

இந்த தேர்தலை சந்திப்பதற்காக திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விட்டன. பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இப்படி தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவதற்கு, அதிமுகவும், பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறையை சுட்டிக் காண்பித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அவர் அனுப்பிய மனுவில், “234 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், வெறும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்துவது அவசியமற்றது. இதனால் ஆளுங்கட்சியினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த தேர்தலை நியாயமாக நடத்த மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வேறு மாநில அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கவும், வாக்காளர்கள் மிரட்டப்படுவதை தவிர்க்கவும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்கு எண்ணும் மையத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும்.வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் வாக்குப்பெட்டிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இதுபோன்ற முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். கொரோனாவை கருத்தில்கொண்டு, பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபடும் நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி இணையதளம் வாயிலாக பிரசாரம் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தவேண்டும். மாநில போலீசார், அரசு அலுவலர்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அதிக அளவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

பாமக தலைவர் ஜி.கே.மணி மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமாரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில்,”76.59 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை இரு கட்டங்களாக நடத்துவது நியாயமற்றது. இதைவிட சுமார் 10 மடங்கு அதிக வாக்காளர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாகத் தான் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தலா 50 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளைக் கொண்ட 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முதல் கட்டமாக 78 இடங்கள், இரண்டாம் கட்டமாக 62 இடங்கள் என்றும், 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முதல் கட்டமாக 755 இடங்கள்,

இரண்டாம் கட்டமாக 626 இடங்கள் என்றும் பிரித்து நடத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. இது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பகுதிக்குச் செல்லவும், உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதற்கும் தான் வழி வகுக்கும் என்பதை ஆணையம் உணர வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த ஆணையிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறும்போது, “தேர்தல் காலத்தில் திமுகவினர் பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு தற்போது அதை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

நீட் விஷயத்தில் மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை சொல்லாததால் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாதோ என்ற பயத்தில் முறைகேடுகள் செய்வதற்காக இரு கட்டமாக தேர்தலை நடத்துவதாக தெரிகிறது. எங்கள் ஆட்சி காலத்தில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தியதால் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது 9 மாவட்டங்களில் 2 கட்டமாக நடத்த வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? உள்ளாட்சித் தேர்தல் குறித்து நடந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை. அப்போது தெரிவித்திருந்தால் சாதக பாதங்களை மாநில தேர்தல் ஆணையரிடம் சொல்லியிருப்போம்.

இப்போது சொல்வது எங்களின் வெற்றியைப் பறிப்பதற்கான சூழ்ச்சியாகவே பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் 2006-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக என்ன செய்தது என்பதை மக்கள் அறிவார்கள்”என்று குறிப்பிட்டார். இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி இருக்கலாம். ஏனென்றால் 9 மாவட்டங்கள் என்று கணக்கிற்காக சொல்லப்பட்டாலும் கூட இவற்றில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகியவற்றின் தாய் மாவட்டங்களான காஞ்சிபுரம் விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி என மொத்தமே 4 மாவட்டங்கள்தான் வருகிறது.

அதனால் இந்த மாவட்டங்களுக்கு இரு கட்டங்களில் தேர்தல் என்பது நகைச்சுவையாக உள்ளது. அதைவிட இன்னொரு வேடிக்கை ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுதான். அதாவது ஒரு ஊரில் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் என்றால் அதன் பக்கத்து ஊரில் அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதனால்தான் அதிமுகவும், பாமகவும் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதனால் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. அண்மையில் நடந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் இப்படி இரு கட்டங்களாக நடத்துவோம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கூறவில்லை. அப்போதே இதை வெளிப்படையாக தெரிவித்திருக்கலாம்.

தவிர 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு 6 மாத கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுவை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துவிட்டு பிறகு ஏன் அவசர அவசரமாக தேர்தலை அறிவித்தது?… அதற்கு சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த காலக்கெடுவான செப்டம்பர் 15-ம் தேதிக்கு முன்பே தேர்தலை நடத்தி முடித்து இருக்கலாமே?… இதனால்தான் எதிர்க்கட்சிகளிடம் சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகளாகவும் உள்ளன. மேலும் சென்னை மாநகராட்சிக்கு 2006 நவம்பர் மாதம் 13-ந்தேதி தேர்தல் நடந்தது.

அன்று வாக்குப் பதிவு தொடங்கிய சில மணிநேரத்திற்கு உள்ளாகவே நகரின் பல்வேறு வாக்குசாவடிகளில் ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் வாக்காளர்களை மிரட்டியது மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களையும் மிரட்டி வாக்கு சாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டுகளை போட்டனர். அன்று சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் காலை 8 மணிக்கே வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வாக்குசாவடியை மூடிய நிகழ்வுகளும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான வாக்குச் சீட்டுகள் சாலையில் சிதறிக் கிடந்ததையும் காணமுடிந்தது. எனவேதான் 2006 உள்ளாட்சி தேர்தலை நினைத்து எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 236

0

0