உதயநிதியின் பிரச்சாரத்திற்காக சொத்தை அடகு வைக்க வேண்டிய நெருக்கடி? : புலம்பும் திமுக மா.செ.க்கள்..!!!
26 November 2020, 6:53 pmஅடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் சாணக்யன் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், பிரச்சாரத்தை எப்படி தொடங்குவது, தேர்தல் பணிகளை எங்கிருந்து, எவ்வாறு தொடங்குவது என்பதில் திமுக பெரும் குழப்பத்தில் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இருப்பினும், தனக்கு பிறகு தனது மகன் கையில் திமுகவை ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை காட்டிலும், இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மகன் உதயநிதியை ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார்.
அதனை நிரூபிக்கும் விதமாகவே, கட்சியில் பல்வேறு மூத்த தலைவர்கள், பேச்சுக்களில் திறமை வாய்ந்தவர்கள் இருந்த போதிலும், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்னும் 2021ம் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக பிரச்சாரத்தை, அரசியல் கத்துக்குட்டி உதயநிதியின் மூலம் தொடங்கியுள்ளார் ஸ்டாலின். இது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், உதயநிதி தலைவரின் மகன் என்பதால் அனைவரின் கருத்துக்களும் மன குமுறலாகவே இருந்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த 20ம் தேதி முதல் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்னும் தலைப்பில் மாவட்ட வாரியான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். இவரது பிரச்சார சுற்றுப்பயணத் திட்டம் அனைத்தும் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷேரின் ஐபேக் நிறுவனத்தின் ஏற்பாடுகள் என்றுக் கூறப்படுகிறது. மாவட்டந்தோறும் 100 பேரை தேர்வு செய்து, அதில் ஒவ்வொருவரும் தலா 20 பேரை உதயநிதி பேசும் பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், அவ்வாறு அழைத்து வரப்படுபவர்களுக்கான தலைக் கூலி, சாப்பாடு, சரக்கு மற்றும் வழிச்செலவு அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் தலையில்தான் விழுகிறதாம். குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திற்கு உதயநிதி சுற்றுப்பயணம் செய்ய ரூ.40 லட்சம் வரை ஆகிறதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் ஐபேக் நிறுவனம் தலையிடுவது அவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ள நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போது இந்த செலவுகளை எப்படி ஈடுகட்டுவது என்று புரியாமல் திமுக மாவட்ட செயலாளர்கள் புலம்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இருப்பினும், தங்களுடைய பொறுப்பின் மீது இருக்கும் மரியாதைக்காக, சொத்துப் பத்திரங்களை அடகு வைத்து, உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்து வருவதாக கட்சியினர் தங்களுக்குள்ளேயே வேதனை தெரிவித்துக் கொள்கின்றனர்.
அண்மையில், டெல்டா மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், உதயநிதி வருகையின் செலவுக்காக வீட்டு பத்திரத்தை அடகு வைத்ததனால், கணவன் – மனைவி இடையே சண்டையே எழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை பெரிதாகி குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்ற தகவல் கசிந்து வருகிறது.
இதுபோன்ற செய்தி பிரபல செய்தித்தாளின் அரசியல் புத்தக பக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப் பகிர்ந்து வரும் பிற கட்சியினர், இப்படி அடுத்தவரின் குடும்பத்தை ரெண்டாக்கி, இதுபோன்று பிரச்சாரம் அவசியமா..? என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.