உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

7 September 2020, 1:38 pm
Quick Share

டெல்லி : சாதி மறுப்பு திருமணம் செய்ததால் உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதிலளிக்க கவுசல்யாவின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.

அதில் சங்கர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தினர் மற்றும் தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு, கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், மேல்முறையீட்டு மனுக்களுக்கு எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Views: - 0

0

0