லக்கிம்பூர் வன்முறை வழக்கு : 2வது சம்மனுக்கு பிறகு போலீஸில் ஆஜரான ஆஷிஷ் மிஸ்ரா..!!!

Author: Babu Lakshmanan
9 October 2021, 12:38 pm
ashish misra - updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார்.

லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வெடித்த வன்முறையில், பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தடையை மீறி சென்றதாக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் தொடரும் என்று ராகுல் காந்தி உறுதியளித்திருந்தார்.

இதனிடையே, விவசாயிகள் மீது காரை ஏற்றிய ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரியும், ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும், மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. அதேவேளையில், மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். மேலும், உடல்நிலை சரியில்லாததால்தான் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை என்றும், விரைவில் அவர் ஆஜராவார் என்று அவரது தந்தை அஜய் மிஸ்ரா கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, 2வது சம்மனும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், தற்போது லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா போலீசில் ஆஜராகியுள்ளார். விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 355

0

0