ராமர் கோவில் கட்ட நிதி உதவி : தேர்தல் நாடகம் நடத்துகிறதா திமுக? அரசியல் களத்தில் புதிய சர்ச்சை!!

26 February 2021, 6:20 pm
DMK -- ramar temple - updatenews360
Quick Share

தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சிக்கலோ, சோதனையோ வந்துவிடுகிறது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது இலங்கை தமிழர் இனப்படுகொலை, 2ஜி அலைக்கற்றை விவகாரம் போன்றவை பெரும் பிரச்சனையாக வந்து நின்றன. இந்த இரண்டிலும் இருந்து திமுக மீள்வதற்கு 8 வருடங்கள் பிடித்தது. ஆனால், இப்போது எழுந்துள்ள சிக்கலோ சற்றே வித்தியாசமானது.
அது அயோத்தி ராமர்கோவில் விவகாரம்.

இப்பிரச்சனை முழுக்க முழுக்க திமுகவின் நிலைப்பாடு சார்ந்த விஷயம். ஆனால், காலம் காலமாக திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த கொள்கையில் இருந்து முற்றிலும் முரண்பட்ட ஒன்றும் ஆகும். ஏனென்றால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில், அப்போதைய முதல்வரான கருணாநிதி பேசும்போது, “பிரச்சனைக்குரிய அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் அதை திமுக அமைதியாக பார்த்துக் கொண்டிருக்காது” என்று எச்சரித்துள்ளார்.

karunanidhi - updatenews360

அதாவது, அயோத்தி நகரையே பிரச்சினைக்குரிய இடம் என்று அப்போது அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 2018-ல் கருணாநிதியின் மறைவுக்கு பின்பு தனது கொள்கை சார்ந்த விஷயங்களில் திமுக சமரசம் செய்துகொண்டு விட்டதோ என்று கருதக்கூடிய பல விஷயங்கள் தென்படுகிறது.

கடந்த சில மாதங்களாக திமுகவின் கொள்கைகளில் ரசாயன மாற்றம் நிகழ்ந்துள்ளதை வெளிப்படையாக காணவும் முடிகிறது.

6 மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்னும் அமைப்பு கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசி வீடியோ வெளியிட்டபோது, அதை ஆரம்பத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை. ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த இந்துக்களும் கருப்பர் கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்தபோது, ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக் கொண்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது “இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதைப்போல திமுகவை சித்தரிக்கிறார்கள். அது தவறு. திமுகவிலும் ஒரு கோடி இந்துக்கள் உள்ளனர்” என்று சமாதானம் சொன்னார்.

இந்த விவகாரம் இன்னும் ஓயாத நிலையில், கடந்த மாதம் திருவள்ளூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட வெள்ளி வேல் ஒன்றை திமுகவினர் அவருக்கு பரிசாக வழங்கியபோது, அதைப் பெற்றுக்கொண்டு ‘போஸ்’ கொடுக்கவும் செய்தார். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தமிழகத்தில் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தியபோது அதை ஸ்டாலின் வன்மையாக கண்டித்தார். அடுத்தமாதமே அவரிடம், வேல் கொடுக்கப்பட்டபோது அதை உற்சாகமாக வாங்கிக் கொள்கிறார்.

இது ஒரு பெரும் விவாதப் பொருளாக மாறியநிலையில், ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோரும் தங்கள் கைகளில் வேல் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதேநேரம், மிக அண்மையில் திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழியிடம் மதுரை திமுக நிர்வாகிகள் வெண்கல வேல் ஒன்றைக் கொடுக்க முயன்றபோது அதை வாங்க மறுத்து அவர் முகம் சுளித்தார்.

கடவுள் நம்பிக்கை என்பது கட்சியில் அவரவர் சார்ந்த விருப்பம் என்றாலும் கூட, கருணாநிதி எப்போதும் பக்தியை வெளிப்படுத்துகிற மாதிரி தன் கையில் வேல் ஏந்தியது கிடையாது.

அடுத்ததாக, அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் கருணாநிதி கடைசி வரை உறுதியோடு இருந்தார். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால், ராமர் பாலம் பற்றி கருணாநிதியிடம் கேட்டால் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? அவர் என்ன இன்ஜினியரா? என்று எதிர்க் கேள்வி எழுப்புவது வழக்கம்.

இதிலிருந்தே அவருக்கு இந்துக்கள் வணங்கும் ராமர் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பது நன்கு புரியும்.

மேலும் கருணாநிதி இருந்தவரை பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், திமுக சுமார் 60 ஆண்டுகளாக, தமிழகத்தில் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் இணக்கமான உறவை கொண்டிருப்பதுதான் என்று கூறலாம்.

ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் கடுமையான கண்டனங்களை திமுக தெரிவித்ததும் உண்டு. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தபோதும் கூட திமுகவின் நிலைப்பாடு இதில் மாறாமல்தான் இருந்தது.

ஆனால் தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நன்கொடை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தான் தன் பங்கிற்கு 11 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். இவர் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மத நல்லிணக்கம் சார்ந்த ஒரு ஒரு நல்ல விஷயம் என்றாலும், அதற்கு முன்பு அவர் இந்து கோவில் கட்ட நன்கொடை அளித்ததாக கூறப்படும் விஷயம் எதுவும் ஊடகங்களில் அவ்வளவு பரபரப்பாக வெளியானது இல்லை.

ஆனால் ராமர் கோவில் கட்டுவதற்கு, அதுவும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மஸ்தான் நன்கொடை கொடுத்த தகவல் மட்டும் எப்படி வெளியே தெரிய வந்தது? என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வந்த கட்சியான திமுகவின் எம்எல்ஏ ஒருவரே, அங்கு கோவில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவினர் இப்படி திடீரென்று ராமர் கோவில் கட்டுவதற்கு நன்கொடை வழங்குவதை வரவேற்கும் இந்து சமய ஆன்மீக பெரியோர்கள் சிலர், இந்த விஷயத்தில் திமுக நடந்து கொண்ட விதத்தை ஏற்கத் தயக்கம் காட்டுகிறார்கள்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “ராமர் கோவில் கட்டுவதற்கு தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் திமுகவினர் நன்கொடை கொடுப்பதை நம்புவதற்கு சற்று கடினமாக உள்ளது. தமிழ் நாட்டில் கடந்த ஓராண்டாகவே இந்து மத நம்பிக்கைகளையும், இந்து தெய்வங்களையும் அவமதிக்கும் போக்கு காணப்படுகிறது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த இந்து சமய மக்களும் ஒன்று திரண்டு விட்டதால் நாத்திக கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் கூட தற்போது அடக்கி வாசிக்கிறார்கள்.

திமுக போன்ற ஒரு சில அரசியல் கட்சியின் தலைவர்களோ இதனால் தங்களுக்கு தேர்தலில் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகின்றனர் என்பது தெரிகிறது. அதனால் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்பதை வெளிக்காட்டும் விதமாக, தேர்தல் நேரத்தில் இது போன்று நாடகம் நடத்துவதுபோல் தெரிகிறது.

இப்படி ஒரு பக்கம் நன்கொடையை கொடுத்துவிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடுவது, பரபரப்பை ஏற்படுத்துவது திமுகவினருக்கு கைவந்த கலை. ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கொடுப்பதை கூட அரசியல் லாபம் கருதி செய்து இருப்பார்களோ என்றும் நினைக்கவே தோன்றுகிறது. ராமர் கோவில் விஷயத்தில் கருணாநிதி கொண்டிருந்த நிலைப்பாட்டை திமுக மாற்றிக் கொண்டிருக்கிறதா என்பதை ஸ்டாலின் மனம் திறந்து சொல்ல வேண்டும். இது தனிநபர் விருப்பம் சார்ந்தது, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நழுவிக் கொள்ளாமல் அவர் பதில் சொன்னால் நல்லது” என்று அந்த ஆன்மீக பெரியவர்கள் தெரிவித்தனர்.

ராமர் கோவில் கட்டுவதற்கு திமுக பிரமுகர்கள் நன்கொடை வழங்கும் தகவல்கள் தேர்தல் நேரத்தில் திடீரென்று ஊடகங்களில் பரபரப்பாக வெளியாவதுதான் இவர்களின் இந்த சந்தேகத்திற்கும், சர்ச்சைகளுக்கும் காரணம்.

எது எப்படியோ, ராமர் கோவில் கட்டும் விஷயத்தில், கருணாநிதி காலத்தில் திமுக கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு தற்போது மாறி இருப்பதாகவே கருதத் தோன்றுகிறது!

Views: - 11

0

0