லக்கிம்பூர் வன்முறை விவகாரம்… விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Author: Babu Lakshmanan7 October 2021, 2:02 pm
உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வெடித்த வன்முறையில், பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தடையை மீறி சென்றதாக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் தொடரும் என்று ராகுல் காந்தி உறுதியளித்திருந்தார்.
இந்த சூழலில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைக்க உத்தரப்பிரதேச போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று விசாரணைக்கு வந்த போது, லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், யாரெல்லாம் குற்றவாளிகள்..? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தது.
0
0