யார் ஊரில் புதிய அரசு மருத்துவமனை: திமுக எம்எல்ஏவுடன் மோதிய வைகோ…அமைச்சர் நிகழ்ச்சி ரத்து..!!

Author: Aarthi Sivakumar
9 November 2021, 10:04 am
Quick Share

திருநெல்வேலி: புதிய மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அமைப்பதில் திமுக எம்எல்ஏவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே ரகசிய மோதல் எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றக் கோரி அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜா சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அந்த அரசு மருத்துவமனையை அதே குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள தனது சொந்த ஊராக கலிங்கப்பட்டியில் அமைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் முன்வைத்துள்ளார். இது, அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஆனால், மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை சாயமலைக்கு கொண்டு செல்ல எம்எல்ஏ ராஜா உறுதியாக இருந்ததால், அவர் மீது வைகோ கடும் அதிருப்தி அடைந்தார். இதற்கான மறைமுக ஏற்பாடுகளும் நடந்து வருவதாக தகவல் கசிந்ததால், திமுக எம்எல்ஏ ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க எம்எல்ஏ ராஜாவுக்கு ஆதரவாக 10 கிராம மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கே நேரடியாக மனுவை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக மாற்றப்படுவதற்கு பெருமைப்படுகிறோம். மாற்று கட்சி தலைவர் வைகோவின் சூழ்ச்சியால், கலிங்கப்பட்டிக்கு மாற்ற மறைமுக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் சுப்பிரமணியனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கலிங்கப்பட்டிக்கு மாறினால், பெண்கள் கர்ப்ப காலத்தில், 20 கி.மீ., துாரம் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர நாங்கள் தயாராக இல்லை. எனவே, கலிங்கப்பட்டிக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை மாறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை சாயமலையில் அமைக்கப்படுமா, கலிங்கப்பட்டியில் அமைக்கப்படுமா என்பது இரு கிராம மக்களின் செல்வாக்கை காட்டும் பிரச்சனையை உருவெடுத்துள்ளது. மருத்துவமனை பிரச்சனை காரணத்தினால் தான் என்னவோ, சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Views: - 375

0

0