வைகோ மகனுக்கு சிக்கலா…? அரசியல் களத்தில் புதிய சர்ச்சை!
Author: Babu Lakshmanan15 November 2021, 8:39 pm
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு வஞ்சகமாக நடந்து கொள்ளும் போதெல்லாம், அதன் முகத்திரையை கிழித்து, தமிழக மக்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற பெருமை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உண்டு.
முல்லைப் பெரியாறும்… வைகோவும்..
ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பல ஆண்டுகள் வீதியில் இறங்கி மக்களோடு மக்களாக கை கோர்த்து அவர் போராடி இருக்கிறார். இதற்காக கால்கடுக்க பலமைல் தூரம் வைகோ நடை பயணமும் மேற்கொண்டவர்.
இதெல்லாம் மறுக்க முடியாத உண்மைகள் என்றாலும்கூட சமீபகாலமாக தனது அரசியல் நிலைப்பாடுகளில் அவர் முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்வது வெளிப்படையாக தெரிகிறது. அதாவது சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதாக உள்ளது.
வாரிசு அரசியல்
ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக கொண்டு வருவதற்காகவே என் மீது கருணாநிதி கொலைப்பழி சுமத்தி திமுகவில் இருந்து வெளியேற்றினார் என்று வைகோ 1993-ம் ஆண்டின் இறுதியில் பகிரங்க குற்றம் சாட்டினார்.
2010க்குப் பின்பு, அவருடைய மகன் துரை வையாபுரி மதிமுகவுக்காக தேர்தல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டபோது, என் மகன் ஒரு போதும் அரசியலுக்குள் நுழைய மாட்டான் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் சொன்னதற்கு மாறாக சில வாரங்களுக்கு முன்பு அவருடைய மகன் மதிமுகவின் தலைமை கழகச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு, மிக அண்மையில் அவருடைய உறுதியான நிலைப்பாடு, நேர்மை முற்றிலுமாக தகர்ந்து போனது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில்தான்.
அதுவும் கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அமைந்த பிறகு, வைகோ அப்படியே தலைகீழாக மாறிப் போய்விட்டார்.
வைகோ பாய்ச்சல்
கடந்த 30-ம் தேதி, தமிழக அரசின் அனுமதியை பெறாமலேயே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை இடுக்கி அணைக்கு திருப்பி விட்டதை கண்டித்து 8-ம் தேதி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை கேலி செய்யும் விதமாக வைகோ நடந்து கொண்டது, தமிழக விவசாயிகள் அவர் மீது வைத்திருந்த மதிப்பையும், மரியாதையையும் சுக்கு நூறாக்கி விட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்ற அடிப்படையில் பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் ஆர்ப்பாட்டம் நடந்து 4 நாட்கள் ஆன பிறகு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்தவர் போல வைகோ திடீரென அண்ணாமலையை கடுமையாக போட்டுத் தாக்கினார்.
அவர் விடுத்த நீண்ட நெடியதொரு அறிக்கை, அண்ணாமலை மீது கோபத்தை வெளிப்படுத்தியதை விட கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு முட்டுக்கொடுப்பது
போலத்தான் இருந்தது.அவர் கூறும்போது, “அண்ணாமலைக்கு தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது நல்லது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள், என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது” என்று காட்டமாக குறிப்பிட்டார்.
யாரை திருப்திப்படுத்த
அதற்கு அண்ணாமலை “முல்லைப் பெரியாறு பற்றி அகரம் தெரியாத நான் உங்கள் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளீர்கள் நன்றி. ஆனால் அதன் சிகரம் தெரிந்த நீங்கள் ஏறி இருக்க வேண்டாமா? மக்கள் பிரச்சினைக்காக, விவசாயிகளுக்காக நான் போராடும்போது அதை தள்ளி நின்று எள்ளி நகையாடுவது யாரை திருப்திப்படுத்த?…”என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு வைகோ இருக்கும் இடமே தெரியவில்லை. அவர் முல்லை பெரியாறு பற்றி வாய் திறக்கவும் இல்லை.
ஆனால் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா என்ன?… வைகோ கடந்த காலங்களில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக என்னவெல்லாம் பேசினார் என்பதை தோண்டியெடுத்து அதை சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
பாவம் வைகோ!
அந்த பழைய வீடியோக்கள் ஒன்றில் வைகோ ‘நச்’சென்று கூறியிருப்பது இதுதான்.
“முல்லைப் பெரியாறில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் செய்தது மிகப் பெரிய துரோகம்…எந்தவொரு மாநில முதலமைச்சரும் தன் மாநிலத்துக்கு செய்யாத ஒரு பச்சை துரோகத்தை கலைஞர் செய்தார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்க 8 ஆண்டுகள் நான் வீதியில் இறங்கி போராடினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
நான் ஜெயலலிதாவை மிகவும் கடுமையாக எதிர்ப்பவன். அவர் மீது ஆயிரம் விமர்சனங்களை நான் வைத்து இருந்தாலும் கூட முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சட்ட ரீதியாக சரியான நடவடிக்கை எடுத்து காத்தவர் ஜெயலலிதாதான்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வீடியோவை பாஜகவின் மாநில பொருளாளர் சேகரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “பாவம் வைகோ! இந்த வீடியோக்களை எல்லாம் தயவுசெய்து அழித்து விடுங்கள். அவரது மகனுக்கு பெரிய சங்கடம்” என்று கிண்டலடித்து இருக்கிறார்.
இது தேவைதானா?
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், “வைகோ மீது இப்போது மட்டுமல்ல, 20 ஆண்டுகளுக்கு முன்பே கொள்கையில் உறுதியற்றவர் என்ற விமர்சனம் வந்துவிட்டது. திமுகவுக்கு எதிராக கட்சி தொடங்கியவர், பின்னர் அந்தக் கட்சியுடனேயே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியும் வைத்தார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இருந்தது. தற்போது திமுக கூட்டணியிலும் அக்கட்சி நீடிக்கிறது. இதனால்தான் அவர் கேரள அரசை கண்டிக்கத் தயங்குகிறார். தமிழகத்துடன் கேரள அரசு, பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் சொல்கிறார்.
யாரோ தூண்டி விட்டதன் பேரில்தான் வைகோ இப்படி அண்ணாமலையை கடுமையாக சாடி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
முன்பெல்லாம் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியிலும், கம்பத்திலும் அவர் போராட்டம் நடத்துகிறார் என்றால் அது கேரளாவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போதோ போராட்டம் நடத்தாமல் சமாதானம் பேசவேண்டும் என்கிறார்.
திமுக சார்பில் டெல்லி மேல்-சபைக்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் வைகோ மௌனம் ஆகிவிட்டாரா?… அல்லது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது நட்பு கட்சியை சேர்ந்தவர் என்பதால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறாரா?… ஒருவேளை கடும் எதிர்ப்பு தெரிவித்தால் தனது மகன் வையாபுரியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று பயப்படுகிறாரா? என்பதும் தெரியவில்லை.
வைகோவை ஒருசிலர் நேர்மையான, தைரியமான அரசியல் தலைவர் என்று கூறுவதுண்டு. ஆனால் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம், 5 மாவட்ட விவசாயிகளிடம் அவருடைய இமேஜை முற்றிலுமாக காலி செய்துவிட்டது.
அதனால்தான் ஐயோ பாவம் வைகோவை விட்டுவிடுங்கள். அவருடைய மகனுக்கு அரசியலில் ஏதாவது சிக்கல் ஆகிவிடப் போகிறது என்று அரசியல் கட்சி தலைவர்களும், நெட்டிசன்களும் கேலி பேசும் அளவிற்கு வைகோவின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாகிவிட்டது.
அதுவும் அண்ணாமலையிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகு நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டது.
சிறந்த நாடாளுமன்றவாதி என பெயரெடுத்த வைகோவுக்கு அதுவும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் தனது கட்சி வேட்பாளர்களை போட்டியிட வைக்க முடியாத வைகோவுக்கு இது தேவைதானா?…”என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
0
0