வன்னியர் உள்இடஒதுக்கீடு ரத்து செய்த விவகாரம் : அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல்.. சேலத்தில் பரபரப்பு..போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2021, 10:16 pm
PMK Protest -Updatenews360
Quick Share

சேலம் : வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு ரத்து செய்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக அரசு வழங்கி சட்டம் இயற்றியது. தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக் கூறி 30க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.துரைச்சுவாமி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த செப்.,15 முதல் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களின் மீதான விசாரணை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. 22ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நவ.1ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி, தீர்ப்பு இன்று வெளியாகியது. அதில், வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது.

இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா..? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா..? முறையான அளவுசார் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க முடியுமா..? உள்ளிட்ட 6 கேள்விகள் தமிழக அரசுக்கு எழுப்பப்பட்டதாகவும், ஆனால், அரசின் விளக்கம் போதிய திருப்தியில்லாததால், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததாக நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். மேலும், மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதால் தற்காலிகமாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதையடுத்து இட்ஒதுக்கீடு ரத்து குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும்‌, பொறுப்பும்‌ முதல்வர்‌ ஸ்டாலின்‌ அவர்களுக்‌ உண்டு. அவர்‌ நிறைவேற்றுவார்‌ என்று நம்புகிறேன்‌. அதன்படி, தமிழ்நாட்டில்‌ கல்வி மற்றும்‌ வேலைவாய்ப்பில்‌ வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.50% உள்‌ இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில்‌ மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும்‌ அரசியல்‌ நடவடிக்கைகளையும்‌ தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் கெவின் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்ததையடுத்து, பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

சேலம் ஆத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்பில் இருந்து போலீசார் அனைவரையும் எச்சரித்துள்ளனர்.

வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Views: - 496

0

0