கூட்டணியில் நம்பர்-2 யார்…? நீயா…? நானா…? வாள் வீச்சில் காங்.,- விசிக!!

Author: Babu Lakshmanan
13 September 2021, 9:54 pm
DMK alliance - updatenews360
Quick Share

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்று சொல்வார்கள். எலியும், பூனையுமாக இருப்பவர்கள் கூட சில நேரங்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எவ்வளவுதான் ஒற்றுமையாக இருந்தாலும் சில நேரங்களில் பிரிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

அதுபோன்றதொரு இடியாப்பச் சிக்கல்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் எம்பிக்கும், விசிக தலைவர் திருமாவளவன் எம்பிக்கும் இடையே தற்போது
ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் அம்பேத்கர்

இத்தனைக்கும், 2019 ஜனவரி மாதம் திருச்சியில் நடந்த விசிக மாநாட்டில் அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர், திருமாவளவனை உச்சி குளிரும்படி புகழ்ந்து பேசியிருந்தார். அதுவரை யாரும் திருமாவளவனை அப்படி போற்றியது இல்லை.

அவர் பேசும்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று கூறினாலே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அவர் ஒரு சாதிக்கட்சியின் தலைவர் என்பது தெரியும். ஆனால் திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ எதிரானவர் அல்ல. அவர் தமிழகத்தின் அம்பேத்கர்” என்று புகழ்ந்து தள்ளினார்.

ஆனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தமிழகத்தில் காங்கிரசும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியில்தான் உள்ளன. இந்த இரு கட்சிகளுமே தற்போது, தங்களுக்குள் யார் பெரிய அண்ணன்?…என்று மல்லுக்கட்டுகின்றன.

தீயத்தூரில் வெடித்த பிரச்சனை

திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம்தான் தீயத்தூர். ஊரின் பெயரிலேயே தீ இருப்பதால் என்னவோ இந்த ஊரில் எழுந்துள்ள ஒரு பிரச்சனை காட்டுத் தீ போல அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவி காங்கிரசுக்கும், விசிகவுக்கும் இடையேயான மோதலை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம், திருநாவுக்கரசரின் சொந்த ஊர் தீயத்தூர் என்பதுதான்.

இந்த ஊரில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்தவர், கருப்பையா. இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்பு இவர் கோவில் வாசலில் தூக்குபோட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது, அப்பகுதிவாழ் பட்டியலின சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கோவில் வாசலில் யாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்… அவரை யாரோ அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று தகவல் பரவியதால் அந்த கிராமத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்ட களத்தில் குதித்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், பூசாரி கருப்பையா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

எச்சரித்த திருநாவுக்கரசர் :

எனினும் விசிகவினர் விடவில்லை. “நடந்திருப்பது கொலைதான். எனவே மீண்டும் ஒரு முறை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கோரி தீவிர போராட்டத்தில் இறங்கினர்.

தீயத்தூர் தவிர அக்கம் பக்கத்து, கிராமங்களிலும் போஸ்டர்களை அடித்து ஒட்டினர். இதனால் 2-வது முறையாக பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் கோவில் பூசாரி
கருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துதான் கொண்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், தற்கொலை செய்துகொண்டவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுவதாக இல்லை. பூசாரி கருப்பையாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதுடன் அப்பகுதியில் தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. இதனால் திருநாவுக்கரசரும் அவருடைய மகன் ராமச்சந்திரன் எம்எல்ஏவும் கடும் எரிச்சலும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

உள்ளூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் என்னதான் எடுத்துச் சொன்னாலும், புரிந்து கொள்ள மாட்டேன், என்கிறார்களே என்று மனம் நொந்த திருநாவுக்கரசர், கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் இப்பிரச்சனையை எடுத்துச் சென்றுள்ளார்.

போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், “உங்கள் ஆட்களை கொஞ்சம் கண்டித்து வையுங்கள், தேவையில்லாமல், எனது சொந்த ஊரில் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்” என்று சற்று காட்டமாகவே கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு எரிச்சலடைந்த திருமாவளவன் தனது கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரை தீயத்தூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்து என்ன நடந்தது? என்பதை ஆய்வு செய்து வருமாறு கூறியிருக்கிறார்.

ஆய்வு நடத்திய அவரும், “இந்த விவகாரத்தை திருநாவுக்கரசரும், அவரது மகனும் கண்டு கொள்ளவில்லை. ஏதோ ஒரு மர்மத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்” என்று திருமாவளவனிடம் போட்டுக் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திருமாவளவன் இந்த விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொண்டு சென்றுள்ளார்.

அறிவாலய கதவை தட்டிய திருமா..

அப்போது திருநாவுக்கரசருக்கு எதிராகவும் அவர் சில விஷயங்களை தெரிவித்ததாகச் கூறப்படுகிறது. இப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடைவிடாமல்
பூசாரி கருப்பையா விவகாரத்தில் தலையிடுவதும், தனக்கு எதிராக காய்களை நகர்த்துவதுமாக இருப்பதை அறிந்த திருநாவுக்கரசர் மேலும் கடுப்பானார்.

மீண்டும் திருமாவளவனை போனில் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த அவர், “கோவில் பூசாரி கருப்பையா தற்கொலைதான் செய்துகொண்டார் என்பது
2 முறை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் கூட உங்கள் கட்சியினர் பூசாரி கருப்பையாவின் குடும்பத்தினரை தூண்டிவிட்டு எனக்கும், எனது மகனுக்கும் எதிராக போராட்டம் நடத்த வைக்கின்றனர்.

உங்கள் கட்சியினர் சும்மா இருந்தாலே போதும். என் மகனின் தொகுதியில் எந்த பிரச்சனையும் வராது. தேவையில்லாமல் ஒரு மரணத்தை வைத்து எனது மகன் எம்எல்ஏவாக இருக்கும் தொகுதிக்குள்ளும், எங்கள் மாவட்டத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறீர்கள். இப்படி அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துங்கள்” என்று கடுமையாகவே எச்சரித்திருக்கிறார்.

Thirumavalavan - stalin - updatenews360

இதனால் திருமாவளவன் நீதிக்காக மீண்டும் அண்ணா அறிவாலயத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறார்.

இதில் யாருக்கு நீதி கிடைக்கும் என்பது தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நேரம் என்பதால் இரு தரப்பினரும் சமரசம் செய்து வைக்கப்படலாம்.

யார் பலசாளி

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “திருநாவுக்கரசர் அதிமுக, பாஜக, காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகளிலும் உயர் பதவிகளை வகித்தவர். தன் மாவட்ட மக்களிடம் மிகுந்த செல்வாக்கும் கொண்டவர் என்பதால் திமுக தலைமையிடம் இப்பிரச்சினையை திருமாவளவன் கொண்டு சென்றிருப்பது தெரிகிறது.

அதேநேரம் தமிழகத்தில் காங்கிரசை விட எனது கட்சிதான் வலிமையானது, நான்தான் திமுக கூட்டணியில் 2-வது பெரிய அண்ணன் என்பதை காங்கிரஸுக்கு உணர்த்தவே இந்த விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம், திருமாவளவன் கொண்டு சென்றிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

dmk_alliance - updatenews360

அதுமட்டுமல்ல, அடுத்து வரும் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் பங்களிப்புதான் அதிகம் தேவைப்படும் என்பதை சூசகமாகவும் திருமாவளவன் திமுகவுக்கு சுட்டிக்காட்டியிருக்கிறார். வட மாவட்டங்களில் பட்டியலின சமுதாய மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள திருமாவளவன் தென் மாவட்டங்களிலும் தனது கட்சியை வலுவாக காலூன்ற செய்வதற்காக இதுபோல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

இதை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரும் நன்றாகவே உணர்ந்துள்ளார். அதனால் இந்த விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை.
இரு கட்சிகளுக்கும் இடையே நீயா?… நானா?…போட்டி தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று எதார்த்த அரசியலை அவர்கள் சுட்டிக் காண்பித்தனர்.

Views: - 169

0

0