திமுக-வை கழற்றி விட்டு விசிக தீர்மானம்…!! காங்கிரசுடன் 3வது அணி அமைக்க திருமா., திட்டம்?

Author: Babu
6 February 2021, 7:53 pm
VCK - congress - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து தீர்மானம் நிறைவேற்றிய அந்தக் கட்சி திமுகவுடன் கூட்டணி என்றோ, திமுக தலைமையான கூட்டணி என்றோ, குறிப்பிடாமல் ‘மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ என்று கூறியுள்ளது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம், கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்குவதாகவும் கூறியதால், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.

Thirumavalavan - stalin - updatenews360

மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது திமுக மட்டுமின்றி காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கியது. ஒருவேளை காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகள் இடம் பெறாவிட்டால் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகளுக்கு கூட்டணி இருக்காதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் புகழ்ந்திருப்பதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

thiruma - eps - updatenews360

இன்னொரு தீர்மானத்தில் “ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டு இனஅழித்தொழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் இணைந்ததே ஒருங்கிணைந்த தமிழர் தாயகம் என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலைபாட்டை இந்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்” வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தோ-சீன எல்லையோரத்தில் இந்தியாவின் நிலப்பரப்பை சீனப் படைகள் ஆக்கிரமித்து உள்ளன என்றும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே சீன ராணுவம் உருவாக்கி இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவருவதை சுட்டிக்காட்டிய விசிக, சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவவை கண்டித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றியதால் விடுதலை சிறுத்தைகள் பாஜக எதிர்ப்பு அணியில் இருக்கும் என்பதையும் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

THIRUMA-UPDATENEWS360

அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று கூறிய விசிக, சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை பொதிகை தொலைக்காட்சியில் உடனே நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது.

“என்.எல்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தேர்வு என்னும் பெயரில் முழுக்க முழுக்க வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதை இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வுமுறை மாற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று விசிக இன்னொரு தீர்மானம் நிறைவேற்றியது.

Views: - 182

0

0