தலிபான்களுக்கு தலைவணங்கும் விசிக..! திசை மாறுகிறதா தமிழக அரசியல்…?

Author: Babu Lakshmanan
18 August 2021, 9:30 pm
VCK - taliban - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதை, நம் நாட்டில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றன. திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர், அமெரிக்க ராணுவத்தை தலிபான்கள் ஓட ஓட விரட்டி விட்டதாக மகிழ்ச்சி பொங்க தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டும் வருகின்றனர்.

தலிபான்களை புகழும் கட்சிகள்

குறிப்பாக முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பராக் கூறும்போது, “இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்ததை போல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்த்து தலிபான்கள் போராடி வென்றுள்ளனர்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆப்கனை தலிபான்கள் மீட்டு விட்டுவிட்டார்கள் என்று பெருமை பேசத் தொடங்கிவிட்டனர். மேலும் இங்குள்ள காட்சி ஊடகங்கள் சில, தலிபான்கள் மிகப்பெரிய சாதனை படைத்து விட்டதாக செய்திகளை வெளியிட்டும் வருகின்றன.

தீவிரவாதிகள் அல்ல…

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் அமீர் ஆகியோர் ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்தி போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று கூறக்கூடாது அவர்கள் போராளிகள் என அழைக்கப்பட வேண்டும் என்று பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த விவகாரத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் 1995-க்கு முன்பு ஆப்கானிஸ்தானை கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யா ஆதிக்கம் செலுத்த முயன்று சூடு கண்ட பூனையாக அங்கிருந்து வெளியேறியது அவர்களின் நினைவுக்கு வந்திருக்கலாம்.

தலைவணங்கும் விசிக..?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளர் உமர் அக்தார் தனது ட்விட்டர் பதிவில், “20 ஆண்டு கால யுத்தம் நிறைவு பெற்றது. தலிபான்கள் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்கள். மண்டியிடாத மானம், வீழ்ந்து விடாத வீரம் வெற்றிகொண்டது ஆப்கானை” என்று மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.

இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல பெண் இயக்குனர் சஹ்ரா கரிமி, உலகம் முழுவதும் உள்ள சினிமா சமூகத்திற்கும் தங்கள் நாட்டின் நிலைமை பற்றிய கடிதம் ஒன்றை அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதில், “தலிபான்களிடமிருந்து சினிமா படைப்பாளிகளையும், எனது அழகான மக்களையும் பாதுகாக்க எங்களுடன் நீங்கள் இணைவீர்கள் என்ற ஆழமான எதிர்பார்ப்புடன் இந்தக் கடிதத்தை உடைந்த இதயத்துடன் எழுதுகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவரது பதிவை இந்தியத் திரையுலகினர் பலரும் மற்றவர்களுக்கு பகிர்ந்தனர். பிரபல தமிழ் சினிமா இயக்குனரான சேரனும் அந்தப் பதிவை ஷேர் செய்திருந்தார்.

மேலும் அதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு ட்வீட்டையும் அவர் பதிவிட்டார். ஆனால் திரையுலகைச் சேர்ந்த சில பிரமுகர்கள், குறிப்பாக சேரனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களே அவருக்கு மிரட்டல்
விடுக்கத் தொடங்கினர். இதனால் மனம் நொந்துபோன சேரன் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டார்.

என்றபோதிலும் மற்றொரு பதிவில் அவர், “அரசியல் காழ்ப்புணர்வுகளோடு, மத இன உணர்வுகளோடு வெறிகொண்டு அலையும் எவரும் என் நண்பர்களாக இணையவேண்டாம். நாகரீகம் தெரியாமல் வார்த்தைகள் பயன்படுத்தும் எவரையும் ஏற்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி மீறி வந்தால் பிளாக் பண்ணத்தான் செய்வேன். அப்பறம் ஸ்கிரீன் ஷாட் போட்டு கதறக்கூடாது” என்று ஆவேசமாக என்று கூறியிருந்தார். அதன் பிறகுதான் அவருடைய நண்பர்கள் அடங்கினர்.

அடக்கமுறையை கண்டிக்காத பிரபலங்கள்

தலிபான்களுக்கு ஆதரவாக இந்தியாவில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருப்பது கவலைக்குரிய விஷயம். ஏனென்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் பெண்களை அடிமையிலும் கீழாக நடத்தினர். மதக் கோட்பாடுகள் என்ற பெயரில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தி பெண்களுக்கு கடும் தண்டனையும் அளித்தனர். கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி மரண தண்டனையும் வழங்கினர்.

7 பெண் குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கணவனே ஒரு மகளின் கற்பை சூறையாட முயன்றபோது போராடி அவனை கொன்று விட்டாள். அந்த வீரத் தாய்க்கு தலிபான்கள் வழங்கிய பரிசு மரணதண்டனை.

afghan - kabul - taliban - updatenews360

கடந்த 20 ஆண்டுகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை தலிபான்கள் கொன்று குவித்து உள்ளனர். இதில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் மட்டும்
2 ஆயிரத்திற்கும் அதிகம். இதனால் உயிருக்கு பயந்து 50 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். விளைச்சல் கண்டிருந்த பல லட்சம் ஏக்கர் நிலங்களை ஒரே நாளில் தீவைத்து கொளுத்தி மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கவிடாமல் செய்தவர்களும் தலிபான்கள்தான்.

இதன் காரணமாகவே அந்த இயக்கத்தினருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரவாதிகள் என்னும் முத்திரையை குத்தின. அதை ஐ. நா.வும் ஏற்றுக் கொண்டது. பல தடைகளும் விதித்தது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

பெண்களை கல்வி கற்க விடாமல் தடுப்பதை கண்டித்து தலிபான்களுக்கு எதிராக உரக்க குரல் கொடுத்த மலாலா என்ற 15 வயது பாகிஸ்தான் சிறுமி மீது 2012-ல் தலிபான்கள் தலையில் சுட்டு, கொடூரத் தாக்குதல் நடத்தினர். அப்போது இந்தக் கொடுஞ்செயலை ஷபிக்குர் ரஹ்மான், சீமான், அமீர், உமர் அக்தார் போன்றவர்கள் கண்டித்ததாக தெரியவில்லை.

அன்று உயிர் தப்பிய அந்த சிறுமி மலாலாவுக்குத்தான் உலக அமைதிக்கான நோபல் பரிசும் 2014-ல் கிடைத்தது.

இனி அமைதி வழியில் ஆட்சி நடத்துவோம் என்று கூறும் தலிபான்கள் முதலில் தாங்கள் செய்த இனப்படுகொலைகளுக்காக உலக நாடுகளிடமும், பாகிஸ்தான் சிறுமி மலாலாவிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

malala maiwand - updatenews360

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பின்பும் அவர்கள் ஏன் இன்னும் எந்திர துப்பாக்கிகளுடனும், ராக்கெட் லாஞ்சர்களையும் ஏந்திக்கொண்டு வீதிகளில் அலைந்து திரிகிறார்கள்? தீவிரவாதிகள்தான், தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் எப்போதும் ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருப்பார்கள்!

இங்கே தலிபான்களை போராளிகள் என்று புகழ்பாடும் தலைவர்களை ஒரு வாரம் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைத்தால் போதும். “நரகத்தை பார்த்துவிட்டோம், எங்களை விட்டு விடுங்கள்” என்று அடுத்த நாளே இந்தியாவிற்கு ஓடோடி வந்து விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

தமிழகத்தில் ஏற்கனவே பிரிவினைவாதம் பேசுவது அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுபோன்ற கருத்துகள் அந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்துவதாகத்தான் அமையும்!

Views: - 425

0

0