‘இண்டி’ கூட்டணியை எதிர்த்து களமிறங்கும் விசிக! அதிர்ச்சியில் காங்., மார்க்சிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 9:28 pm
India
Quick Share

‘இண்டி’ கூட்டணியை எதிர்த்து களமிறங்கும் விசிக! அதிர்ச்சியில் காங்., மார்க்சிஸ்ட்!

திமுக கூட்டணியில் விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், இனிமேலும் பொறுத்திருந்து எந்தப் பயனும் இல்லை, திமுகவும் இனி நம்மை அழைத்து பேசப்போவது கிடையாது என்று திருமாவளவன் நினைத்தாரோ, என்னவோ மார்ச் எட்டாம் தேதி அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கோட்டைக்கே சென்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் அறிவாலயம் வர அங்கு வந்திருந்த திருமாவளவன் தலைமையிலான விசிக நிர்வாகிகளுடன் அவர் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சிதம்பரம், விழுப்புரம் தனித்தொகுதிகளில் விசிக போட்டியிடும் விதமாக இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் திமுக தங்களை இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லையே என்று மனம் நொந்து போய் திருமாவளவன் காத்திருந்ததற்கு முக்கிய காரணமே விசிகவுக்கு இரண்டு தனி தொகுதிகளும், ஒரு பொதுத் தொகுதியும் என மொத்தம் மூன்று சீட்டுகள் கேட்டு திமுக தலைமையிடம் மல்லுக்கட்டி வந்ததுதான்.

அது மட்டுமல்லாமல் எங்களது கட்சி சின்னத்தில்தான் இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என விசிக அடம் பிடிக்கவும் செய்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திருமாவளவன் தனது கட்சியின் துணை பொதுச் செயலாளராக அண்மையில் நியமித்த ஆதவ் அர்ஜுனாவுக்காக பொதுத் தொகுதி கேட்டது தான்.

ஆனால் மூன்று தொகுதிகளை விசிகவுக்கு ஒதுக்க திமுக தலைமைக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. அதனால்தான் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகும் கூட அது எந்த பலனையும் அளிக்கவில்லை.

அவரை சந்திப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை திமுகவிடம் இரண்டு தனி தொகுதிகளும் ஒரு பொதுத் தொகுதியும் நிச்சயம் கேட்டுப் பெறுவோம் என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் திமுக இரண்டு தொகுதிகளுக்கு மேல் கொடுக்க மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த அவர் “அப்படி என்றால் நாங்கள் மீண்டும் மீண்டும் மூன்று தொகுதிகளை கேட்போம்” என்றும் அதிரடி காட்டினார்.

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பேசிய பிறகு திருமாவளவன் பெட்டி பாம்பு போல அடங்கி விட்டார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
திமுகவுடன் தொகுதி உடன்பாட்டை முடித்துக் கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவருடைய முகத்தில், ஏதோ ஒரு வித சோகம் அப்பி இருந்ததை காணவும் முடிந்தது.

அவர் கூறும்போது, “சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுவதென
திமுகவுடன் உடன்பாடு உருவாகி உள்ளது. கட்சிநலன், கூட்டணி நலன், நாட்டு நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திமுகவின் மூத்த தலைவர்களுடனும், திமுக தலைவருடனும் விரிவாக – மனம் திறந்து கலந்துரையாடல் செய்து, அதனடிப்படையில் இந்த உடன்பாடு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

திமுகவிடமிருந்து இரண்டு தொகுதிகளைக் “கேட்டு பெற்றுக் கொண்டோம் என்பதைவிட, கலந்துபேசி “கருத்தொருமித்துப் பகிர்ந்து கொண்டோம்” என்பதே பொருத்தமாகும். திமுகவிடம் முதலில் விசிக தரப்பில் மூன்று தனித் தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதிகளை கேட்டோம்.  பின்னர் இரண்டு தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதிகளை வலியுறுத்தினோம்.

கடந்த தேர்தல்களில் இந்த கூட்டணி எவ்வளவு கட்டுக்கோப்பாக இயங்கியதோ, அந்த அடிப்படையில் விரிவான கலந்தாய்வுக்கு பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ அதே பகிர்வு முறை ஒவ்வொரு கட்சியின் உடன்பாட்டோடு தொகுதி பங்கீடு நடந்துள்ளது.

விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தனித் இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து உள்ளோம். தெலுங்கானாவில் 10, கர்நாடகாவில் 6, கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். ஆந்திராவில் இண்டியா கூட்டணியுடன் போட்டியிடுவதற்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவருடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. அப்படி இண்டியா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் விசிக தனித்துப் போட்டியிடும்” என்று குறிப்பிட்டார்.

திருமாவளவன் கடைசியாக தெரிவித்த தகவல்தான் தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாக மாறிவிட்டது. சனாதன சக்திகளை வேரறுப்போம் அதனால்தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று அவர் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆவேசமாக பேசி வருவதால் 2019 தேர்தலை போல ஒரு தொகுதியில் திமுக சின்னத்திலும், இன்னொரு தொகுதியில் சொந்த சின்னத்திலும் மீண்டும் போட்டியிடுங்கள் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தாலும் கூட அதை திருமாவளவன் மறுத்திருக்க மாட்டார் என்பதுதான் உண்மை.

ஆனால் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு தென் மாநிலங்களிலும் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் விசிக தீவிரமாக இறங்கி இருப்பது இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பெரும் பீதியை கிளப்பி விட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

காரணம் கர்நாடகா,கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் வலுவான கட்சியாக உள்ளது. கேரளாவில் ஆட்சி நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டும் இருக்கிறது. இதனால் திருமாவளவனின் அறிவிப்பை கேட்டது முதலே இந்த மூன்று கட்சிகளும் கதி கலங்கி போய் நிற்கின்றன. ஏனென்றால்
இந்த மாநிலங்களில் வசிக்கும் கணிசமான தமிழர்கள், பட்டியலின மக்களின் வாக்குகளை குறிவைத்தே தனது வேட்பாளர்களை விசிக நிறுத்தும் என்பது தெரிகிறது.

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்து இருக்கிறது. இந்த தொகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களும், குறிப்பிடத்தக்க அளவிற்கு பட்டியலின மக்களும் வாக்காளர்களாக உள்ளனர். இதனால் திருமாவளவன், வயநாட்டில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினால் என்ன ஆகுமோ? என்ற அச்சம் கேரள காங்கிரசுக்கு இப்போதே வந்துவிட்டது. எனினும் இண்டியா கூட்டணியில் இருந்து கொண்டே இதுபோன்ற விபரீதமான முடிவை விசிக எடுக்காது என்று சொல்லலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திருமாவளவன் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தென்மாநிலங்கள் கடந்து மராட்டியத்திலும் விசிகவை கால் பதிக்க அவர் முயற்சி மேற்கொண்டும் வருகிறார்.

“அதேநேரம் தென் மாநிலங்கள் அத்தனையிலும் விசிக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று திருமாவளவன் அறிவித்து இருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றுதான்” என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸும் எதிர்க்கட்சியான பாஜகவும் உறுதியாக இருக்கின்றன. அந்த மாநிலத்தில் விசிக போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டால் அவருடைய எம்பிக்கள், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

என்றபோதிலும் கடந்த ஆண்டு நடந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் தமிழர்களும், பட்டியலின மக்களும் அதிகம் வசிக்கும் பெங்களூரு, நகரிலும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் 10 தொகுதிகளில் விசிக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி திருமாவளவன் தீவிர தேர்தல் பிரச்சாரமும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி கே சிவகுமார் உங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறுங்கள் என்று கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து விசிக வேட்பாளர்கள் அனைவரையும் தேர்தல் களத்திலிருந்து திருமாவளவன் திரும்ப பெற்றுக் கொண்டார். அதுபோல இந்த முறை எந்த அழுத்தத்திற்கும் அவர் அடி பணிந்து விட மாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.

அதேபோல கேரளாவில் அவர் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று விட்டால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு நிச்சயம் விடிவு
காலம் பிறந்து விடும். தண்ணீரும் தடையின்றி தாராளமாக கிடைக்கும்.

ஆந்திராவைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக திருமாவளவன் கூறுகிறார். இதில் அவர் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் சரி, தனித்துப் போட்டியிட்டாலும் சரி கண்டிப்பாக குண்டூர் உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளை எளிதில் விசிக கைப்பற்றி விடும் என்கிறார்கள். இதன் மூலம் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்கள் பயனடைவதை திருமாவளவன் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கவும் செய்யலாம்.

ஆனால் ஒரேயொரு சந்தேகம் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும்தான் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பாஜக மூன்றாவதாகவும், காங்கிரஸ் நான்காவதாகவும்தான் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது அந்த மாநிலத்தில் மட்டும் இண்டியா கூட்டணியில் இருக்கும் காங்கிரசுடன் திருமாவளவன் ஏன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்பதுதான் புரியவில்லை.

திமுக கூட்டணியில் வழக்கம்போல இரண்டு தனித் தொகுதிகள் விசிகவுக்கு கிடைத்துவிட்டது. ஆனால் அக்கட்சி தென் மாநிலங்களில் வலுவாக காலுன்றுவதற்கு பல கோடி ரூபாய்களை செலவிட்டதாக கூறப்படும் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகனும், இந்திய பணக்காரர்களில் ஒருவருமான ஆதவ் அர்ஜுனாவுக்காக ஒரு பொதுத் தொகுதி கேட்டும் திமுக கையை விரித்து விட்டது என்பதுதான் இதில் வேதனை. இது தனிப்பட்ட முறையில் திருமாவளவனுக்கு அதிர்ச்சி தரும் ஒன்றுதான்.

இவருடைய சென்னை வீட்டில்தான் பிப்ரவரி 9-ம் தேதியான இன்று மத்திய அமலாக்கத்துறை பல மணி நேரம் அதிரடி ரெய்ட் நடத்தியது. அப்போது சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களை ED அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இது விசிகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது.

ஏனென்றால் திருச்சியில் கடந்த ஜனவரி மாத இறுதியில் விசிக நடத்திய வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கான முழுச் செலவையும் ஆதவ் அர்ஜுனாதான் ஏற்றுக் கொண்டிருந்தார் என்று கூறப்படுவதுதான்.

இது ஒருபுறம் இருக்க திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதியை கேட்டு பெறுவதற்காக விசிக தொண்டர்கள் தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று திமுகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்கு முதல் நாள் வரை அக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத் தமிழன் ஆவேசமாக செய்தியாளர்களிடம் கொந்தளித்து இருந்தார்.

ஆனால் அவரோ இரண்டு தனித் தொகுதிகளுக்கு மேல் உங்களுக்கு எதுவும் கிடையாது என்று திமுக கூறிவிட்ட பின்பு இந்த முடிவு எங்களுக்கு மன வருத்தம் தருகிறது என அடங்கிப் போய்விட்டார்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் விசிக நாடாளுமன்ற தேர்தலில் தனது வேட்பாளர்களை களம் இறக்கி வெற்றி காண வைப்பதன் மூலம் இந்த மூன்று மாநிலங்களுடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரிதான்!

Views: - 83

0

0