வேல்யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர்கள் கைது : தேசிய அளவில் கவனம் ஈர்த்த பழனிசாமி அரசின் அதிரடி!!

6 November 2020, 7:31 pm
eps - bjp - updatenews360
Quick Share

சென்னை : தமிழ்நாடு பாஜக சட்டவிரோதமாகத் தொடங்க முயன்ற வேல்யாத்திரையைத் தடுத்து மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களை அதிரடியாகக் கைது செய்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ‘சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுவது மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியென்றாலும் அஞ்சாமல் கைது செய்வோம்’ என்ற தமிழக அரசின் துணிச்சல் திமுக ஆதரவாளர்களையும், அதிமுக பக்கம் இழுக்கத்தொடங்கியுள்ளது. ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்; துணிவும் வரவேண்டும் தோழா” என்ற அதிமுக நிறுவனர் எம்.ஜி,ஆர் வழியில் முதல்வர் நடைபோடுவதாக மக்கள் பாராட்டுகின்றனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றிபெற்ற தமிழக அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தேவையான தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிதளவு குறைந்து வருகிறது, ஆனால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டதுபோல் தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என்ற அச்சத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பிவருவதால், பெருமளவு மக்கள் கூடும் கூட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் மாநில அரசு தடைவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக நவம்பர் 6 முதல் பாபர் மசூதி இடிப்பு நினைவு நாளான டிசம்பர் 6 வரை ஒரு மாதம் ‘வெற்றிவேல் யாத்திரை’ என்ற அரசியல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. இந்த யாத்திரைக்குப் பெருமளவு மக்களைக் கூட்டினால் மீண்டும் கொரோனாத்தொற்று பரவலாம் என்றும், இதுவரை கடுமையான நடவடிக்கைகளையும், ஊரடங்கையும் கடைப்பிடித்து மக்கள் பெரிதளவு தியாகம் செய்தது வீணாகப் போகலாம் என்றும் கருதப்பட்டது. ஒருவேளை பாஜக ஊர்வலத்துக்குக் குறைந்த அளவில்தான் கூட்டம் வரும் என்றாலும், வேறு கட்சியினரும் இதுபோன்ற ஊர்வலங்களை நடத்த அனுமதி கோரலாம் என்ற சூழலும் உருவானது.

அதுமட்டுமின்றி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல இடங்களில் மத மோதல்களும், அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல்களும் ஏற்படலாம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும், பல அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் கருத்து தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சர்ச்சைக்குரிய இந்த வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி தரவில்லை.

இந்த யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சில அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, தமிழக அரசு யாத்திரைக்கு அனுமதி தரவில்லை என்று தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் உரிய உத்தரவு பாஜகவுக்குக் கிடைத்தபின் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று வழக்கைத் தீர்த்துவைத்தது.
ஆனால், தமிழக அரசிடம் அனுமதி மறுக்கும் உத்தரவைப் பெற்றபின், மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி யாத்திரைக்கு அனுமதி கோராமல் சட்டவிரோதமாக திருத்தணியில் யாத்திரையைத் தொடங்க பாஜக தலைவர் எல்.முருகன் தொடங்க முயற்சித்தார். ஒருவேளை உயர்நீதிமன்றம் அனுமதி தராவிட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாஜக அணுகியிருக்கலாம். அதையும் செய்யாமல் சட்டம் ஒழுங்குக்கும் கொரோனாக் கட்டுபாடுகளுக்கும் சவால் விடுவதுபோல், திருத்தணியில் யாத்திரையைத் தொடங்கிய எல். முருகனையும், வேறு தலைவர்களையும் தடுத்துக் கைதுசெய்துள்ளது தமிழக அரசு.

‘மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பழனிசாமி அரசு பணிந்துபோவதாகவும், திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தால் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடும்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்துவரும் பிரச்சாரம் இந்த நடவடிக்கையால் தவிடுபொடியாகியுள்ளது. சட்டம் ஓழுங்கு, மக்கள் நலன் என்று வரும்போது கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படமாட்டோம் என்ற செய்தியை உரத்துச்சொல்லும் நடவடிக்கையாக இந்தக் கைது அமைந்துள்ளது.

மத்தியில் ஆளும் கட்சியென்று அதிமுக அஞ்சாது என்பதையும் ‘ஒரு தவறு செய்தால் அதைத்தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்று கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர் காட்டிய வழியிலும், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா காட்டிய பாதையிலும், எடப்பாடி பழனிசாமி செல்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளது இந்த நடவடிக்கை. இதுகுறித்துப் பேசிய முதல்வர் ‘சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என்று ஒரே வரியில் கூர்மையாகக் பேசியிருப்பது ஸ்டாலினைப்போல், அவர் வீரவசனம் பேசும் பழக்கம் இல்லாதவர். எதையும் செயலில் காட்டுபவர் என்ற பிம்பத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

eps announced - updatenews360

பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு ஆதாயத்தைவிட இழப்புகளே அதிகம். பாஜகவுடன் கைகோர்த்ததால் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மையான இடங்களில் தோல்வி ஏற்பட்டது. அதே நேரம் நடத்தப்பட்ட 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களை அதிமுக வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுடன் நெருக்கம் காட்டாமலும் அந்தக்கட்சித் தலைவர்களைப் பிரச்சாரத்துக்கு அழைக்காமல் இருந்ததாலும் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தோற்றது.

இதே முறையில் பாஜகவிடம் எந்த நெருக்கமும் காட்டாமல் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களை சந்தித்தபோது அதிமுக பெரும் வெற்றிபெற்றது. பாஜகவுடன் சேருவதால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகளும் கிடைப்பதில்லை. பெரும்பாலான மக்களும் பாஜக எதிர்ப்பு மனநிலையில்தான் இருக்கின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி என்பது பெரும் சுமையாகத்தான் இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமையாவிட்டால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை, பாஜகவுக்குத்தான் பெரும் இழப்பாக முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Views: - 15

0

0

1 thought on “வேல்யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர்கள் கைது : தேசிய அளவில் கவனம் ஈர்த்த பழனிசாமி அரசின் அதிரடி!!

Comments are closed.