கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
28 April 2022, 4:10 pm
Quick Share

ராணிப்பேட்டை அருகே கண்ணெதிரே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தையை உடனடியாக தந்தை கால்வாயில் குதித்து காப்பாற்றி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சோளிங்கர் நகராட்சி 6வது வார்டு பகுதிக்கு உட்பட்ட செங்குந்தர் தெருவில் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் ஆறு இடங்களில் தளம் உடைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஒரு வார காலம் ஆன நிலையில், உடைக்கப்பட்ட தளம் மூடாத நிலையிலே இருந்து வந்தது.

இந்நிலையில், அந்த தெருவை சேர்ந்த விவேக் என்பவர் அவரது இரண்டரை வயது மகளான மித்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்பினார். இருசக்கர வாகனத்தில் இருந்து இருந்து குழந்தையை இறக்கி விட்டு வீட்டுக்கு செல்லும்படி தந்தை கூறியுள்ளார். அப்போது, வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்த அந்தக் குழந்தை, கால் தடுக்கி தந்தை கண்ணெதிரே அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்தது.

இந்த சம்பவத்தினால் பதைபதைத்துப் போன சிறுமியின் தந்தை, உடனடியாக இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி கழிவுநீர் கால்வாயில் குதித்து குழந்தையை மீட்டார். அதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நகராட்சி நிர்வாகம் சார்பாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்ற நிலையில், ஒரு வார காலம் ஆகியும் அப்பகுதிகள் மூடப்படாமல், அஜாக்கிரதையால் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Views: - 1114

0

0