பிராமணர்கள் பெயர் சொல்லி அழைத்தால் செருப்பால் அடிப்பேன்… அமைச்சர் துரைமுருகன் மீண்டும் சர்ச்சை பேச்சு..!!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 2:19 pm
durai murugan - updatenews360
Quick Share

வேலூர் : பிராமணர்கள் பெயர் சொல்லி அழைத்தால் செருப்பால் அடிப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் திராவிட கழகத்தின் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்காக என்ற கருத்தரங்கமும், கற்போம் பெரியாரியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஒரு டிரோஜன் குதிரை ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் மற்றும் அமுலு ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். டிரோஜன் குதிரை எனும் நூலை வீரமணி வெளியிட அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் நீர் வளத்துறையின் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பெரியார் அக்காலத்தில் பெற்று தந்த இட ஒதுக்கீட்டால் தான் எல்லா சமுதாய மக்களும் கல்வி உரிமை பெற்று முன்னேற்றமடைந்துள்ளனர். நான் இங்கு அமைச்சராகி உள்ளேன். அக்காலத்தில் பிராமணர் யாரையும் மதிப்பது கிடையாது. ஒரு பாப்பன் எனது பெரியப்பா பெயரை சொல்லி அழைப்பான். இப்போது, அது போல் அழைத்தால் அவனை செருப்பால் அடித்திருப்பேன், என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் திராவிடர் கழக பொது செயலாளர் வீரமணி பேசுகையில், “அதிமுக நினைத்திருந்தால் நீட்டை ஒழித்திருக்கலாம். ஆனால் அந்த முதுகெலும்பு அதிமுகவுக்கு இல்லை. ஆனால் திமுக என்ன செய்தது என கேட்காதீர்கள். நீங்கள் செய்தது வேறு, திமுக செய்தது வேறு, இது மக்கள் இயக்கம் நீட்டை நாங்கள் ஒழிக்கும் வரையில் ஓயமாட்டோம்.

கல்வியை மாநில பட்டியலில் இருந்து எடுத்து அனைத்தையும் ஒன்றிய அரசே செய்கிறது. ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என கூறுகிறார்கள். ஆனால் ஒரே ஜாதி என சொல்ல மறுக்கின்றனர். மீண்டும் சமஸ்கிருதம் படித்தால் மருத்துவராக முடியும் என்ற நிலையை உருவாக்கவே நீட்டை கொண்டு வந்துள்ளனர். இதனை ஒழிக்க வேண்டும், என்று பேசினார்.

ஏற்கனவே, பிராமணர்களை திமுகவினர் பாப்பன் எனக் கூறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், துரைமுருகனின் இந்தப் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 985

0

0