வெளிமாநிலத்தவருக்கு நுழைவுச்சீட்டு… பிரிவினையைத் தூண்டும் வேல்முருகன்…?

Author: Babu Lakshmanan
30 October 2021, 5:44 pm
Velmurugan - migrate workers - updatenews360
Quick Share

திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவற்றின் தலைவர்கள் சமீப காலமாக திமுக அரசுக்கு நெருக்கடி அளிப்பதுபோல் ஏதாவதொரு கருத்தை பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதே வாடிக்கையாகி விட்டது.

உண்மையிலேயே திமுக மீது உள்ள அபிமானத்தால் இப்படி அவர்கள் பேசுகிறார்களா? அல்லது சிக்கலை உருவாக்க பேசுகின்றனரா? என்பது கேள்விக்குறிதான்.

தனிக்கொடி

THirumavalavan - updatenews360

கடந்த வாரம் விசிக தலைவர் திருமாவளவன் தமிழகத்துக்கு தனிக்கொடி வேண்டும், நவம்பர் 1-ம் தேதியை தமிழர் இறையாண்மை தினமாக அரசு கடைபிடிக்க வேண்டுமென்று அதிரடி காட்டினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜவாஹிருல்லா எம்எல்ஏவும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்
அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால் இறையாண்மை என்பது ஒரு நாட்டுக்கு உரிய அடையாளம். அப்படியென்றால் இவர்கள் பிரிவினைவாதம் பேசுகிறார்களா?…என்ற கேள்வி எழுந்தது. இதை எந்த நோக்கத்தில் சொன்னார்கள்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

உள் அனுமதி சீட்டு

இந்த சலசலப்பு அடங்குவதற்குள் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தன் பங்கிற்கு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார். அதுவும் தற்போது பரபரப்பு பேசுபொருளாக மாறிவிட்டது.

அப்படி அவர் என்னதான் சொன்னார்?…

வேல்முருகன் வெளியிட்ட அந்த நீண்ட அறிக்கையில் நிறைய விஷயங்களை சொல்கிறார்.
“தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே, 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் அலை அலையாகக் வந்து இறங்குகின்றனர். உடல் உழைப்புப் பணிகளிலும் இவர்கள் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, மண்ணின் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகின்றது. தொழில் – வணிகம் ஆகியவற்றிலும் வெளி மாநிலத்தவரே ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான நிலை உள்ளது. இப்போக்கு, தமிழர்களின் வேலை, தொழில், வணிகம், பண்பாடு உள்ளிட்ட வாழ்வுரிமையைப் பறிக்கிறது.

அசாம் மாநிலத்தின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில் மிகை எண்ணிக்கையில் குடியேறிய வங்காளிகள், அப்பகுதியை தங்களுக்கே உரிய தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கின்றனர். அசாமிடம் இருந்து தமிழகம் பாடம் கற்கவில்லை என்றால், தமிழர்கள் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையாய் ஆகிவிடுவார்கள்.

அதோடு, தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கக் கூடிய இடத்திற்கு வடமாநிலத்தவர்கள் வந்தும் விடுவார்கள். அவர்கள் தமிழக கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்குத்தான் வாக்களிப்பார்கள். அப்படி நேர்ந்து விட்டால், தமிழகத்தில் இருக்கும் மாநில கட்சிகள் இரண்டாதர கட்சிகளாகி விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவையில் குடியேறிய வடமாநிலத்தவர்கள், மோடிக்கு வாக்களிக்கக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டது நினைவிருக்கும்.

மேலும், தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. எனவே, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாதம்?

வேல்முருகன் இப்படியொரு கோரிக்கை வைத்திருப்பதை பிரிவினைவாத கருத்தாகவே பார்க்க முடிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2100 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல தமிழ்ப் புலவரும் கணிதவியல் அறிஞருமான கணியன் பூங்குன்றனார் தனது புறநானூற்று பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம், ‘உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே! அனைவரும் நமது உறவினர்கள்தான்!’ என்பதாகும்.

ஆனால் தனது கட்சியின் பெயரில் தமிழகத்தை கொண்டிருக்கும் வேல்முருகன், இந்த தமிழகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல உரிமை கொண்டாடுகிறார். வெளிமாநிலத்தவர்கள், குறிப்பாக வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது அவருடைய வாதமாக இருக்கிறது. அதையெல்லாம் விட அவர்கள் பாஜகவுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று அரசியல் பேசுகிறார். இது ஒருவரின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் கருத்து.

தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி கேரளாவின் பல நகரங்களுக்கு சென்று அங்கு காலகாலமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதேபோல் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும், மராட்டியத்தின் தலைநகர் மும்பையிலும் தமிழர்கள் பல பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்களெல்லாம் யாருக்கு ஓட்டுப் போடுகிறார்கள்? என்ற கேள்வியை வேல்முருகனால் எழுப்ப முடியுமா?…

அவர், அசாம் மாநிலத்தில் புகுந்துள்ள வங்காளிகள் பற்றி பேசுகிறார். அதை ஒரு வாதமாக ஏற்றுக் கொண்டாலும் கூட 1971 முதல் வங்காளதேச நாட்டில் இருந்து இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் புகுந்து 1 கோடி வங்காளதேசவாசிகள் சட்டவிரோதமாக அங்கு வசித்து வருகின்றனர். அவர்களை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி தங்களின் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருகின்றனரே அதுபற்றி வேல்முருகன் என்ன சொல்வார்?..அவரால், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்ப முடியுமா?…

பதவிக்கு ஆபத்து

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்பவர்கள் அங்கே நிரந்தரமாக குடியேறக் கூடாது, தொழில் செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே கூறப்படவே இல்லை. எனவே வேல்முருகன் பேசுவது முழுக்க முழுக்க பிரிவினைவாதம்தான் என்றே கருதத் தோன்றுகிறது.

தமிழகத்தின் வேலை வாய்ப்புகளில் வட மாநிலத்தவர்கள் அதிகம் நுழைகிறார்கள் என்றால் அதை சட்ட ரீதியாகத்தான் அணுக முடியும். அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதை இந்திய தண்டனை சட்டப்படி தடுக்க வேண்டியதும் தண்டிக்கவேண்டியதும் மாநில அரசின் கடமைதான். தமிழகத்தில் நுழைவதற்கு அனுமதி சீட்டு, நுழைவுச்சீட்டு என்று கூறுவதெல்லாம் அதை சரி செய்ய உதவாது. அதற்கு தீர்வாகவும் அமையாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி இதுபோல் பேசுவது, சட்டத்துக்கு விரோதமானதாகவே பார்க்கப்படும். யாராவது வழக்கு போட்டால் வேல்முருகனின் பதவிக்கும் ஆபத்து வரலாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனார், அடுத்த வரியிலேயே ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றும் கூறியிருக்கிறார். இதற்கான அர்த்தம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான்.

கடந்த மே மாத இறுதியில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மகாவீர் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் அவருடைய துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “2014, 2016, 2019ஐ தாண்டி இப்போது நடந்த முடிந்த தேர்தலிலாவது நீங்கள் திமுகவுக்கு வாக்களிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்போதும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எங்களுக்கு வாக்குகள் விழவில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் வசிக்கும் பகுதியில் 50 வாக்குகள்தான் எங்களுக்குக் கிடைத்தது. ஆனால், பாஜகவுக்கு 300, 350 வாக்குகள் கிடைத்தன” என வடமாநிலத்தவர்களை குறிப்பிட்டு பேசினார்.

அது நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டதால் என்னவோ அவர் பேச்சை முடிக்கும்போது, “நீங்கள் வாக்களித்தாலும் சரி, வாக்களிக்கா விட்டாலும் சரி நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார்” என அரசியல் விமர்சகர்கள் அண்மைக்கால ஒரு நிகழ்வையும் நினைவூட்டினர்.

வேல்முருகனின் அனுமதிச் சீட்டு விவகாரம் எதில் கொண்டு போய்விடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 323

0

0