உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் விஜயகுமார் திடீர் ராஜினாமா : நேர்மையான பணி மூலம் தமிழக, மத்திய அரசின் நன்மதிப்பை பெற்றவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 7:26 pm
Vijayakumar Ips Resign - Updatenews360
Quick Share

சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975–ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991–ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார்.

2001–ம் ஆண்டு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆனார். போலீஸ் கமி‌ஷனராக இருந்த நிலையில் 2003–ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண்டோ படையின் தலைவர் ஆனார். 2004–ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 2012–ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சிறப்பு பணிக்காக மத்திய உள்துறைக்கு பணிக்கு சென்ற அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார், கடந்த 2018-ம் ஆண்டு அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

ஓய்வுக்கு பிறகு, பிரிக்கப்படாத ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அதன்பின், கடந்த 2019-ம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கான பாதுகாப்பு பிரச்சினைகளில் அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

இந்தநிலையில், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை கே.விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 370

0

0