சட்டப் பேரவை தேர்தலில் தனித்து களமிறங்கும் விஜயகாந்த், சரத்குமார்?
31 January 2021, 4:17 pmமே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நடிகர் கட்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
முந்தைய தேர்தல்களை விட இவர்களது கட்சிகள், இம்முறை பிரதான கட்சிகளை ஆதிக்கம் செலுத்தும் சூழலை தங்களுக்கு தாங்களே வேகமாக உருவாக்கிக் கொண்டு வருகின்றன.
2000-க்கு பிறகு தமிழ் சினிமா உலகிலிருந்து விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், சீமான், கருணாஸ், கமல்ஹாசன் என்று சுமார் அரை டஜனுக்கும் மேலான பிரபலங்கள் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து வருகின்றனர்.
இவர்களுக்கு முன்பாகவே தனிக் கட்சி தொடங்கி இன்றும் துடிப்புடன் செயல்பட்டு வரும் இயக்குனர் ராஜேந்தரும் இருக்கிறார்.
மற்றவர்களெல்லாம் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாலும் கார்த்திக் மட்டும் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து வாணவேடிக்கை காட்டுவது வழக்கம்.
அவர், இம்முறை வருகிறாரோ இல்லையோ, திரையுலகின் மற்ற பிரபல நட்சத்திரங்கள் வரும் தேர்தலில் போட்டியிட இப்போதே முஷ்டியை உயர்த்தி வருகின்றன.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக
மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத் தொடங்கி கணிசமான வாக்குகளை அந்த தேர்தலில் பெற்ற நடிகர் கமல் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கும் அளவிற்கு இன்று உயர்ந்திருக்கிறார்.
அதேநேரம் அவருக்கு முன்பாகவே கட்சி தொடங்கிய திரையுலக நட்சத்திரங்களான விஜயகாந்த், சரத்குமார், சீமான் ஆகியோர் தங்களது பழைய செல்வாக்குடன் இருக்கிறார்களா? என்பதற்கு வருகிற தேர்தலில் விடை கிடைக்கும்.
தற்போதுவரை அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம்பெற்றிருக்கின்றன.
இந்த இரு கட்சிகளுமே தற்போது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவிடம் தொகுதி பங்கீட்டை விரைவாக முடிக்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
அது மட்டுமின்றி கடந்த சில வாரங்களாகவே அதிமுக தலைமைக்கு சவால் விட்டும் வருகின்றன. அதாவது கூட்டணியில் கணிசமான தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம் என்று மிரட்டுகின்றன.
சமீபத்தில், கும்பகோணத்தில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் ராதிகா, “யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நாங்கள் முழுமையாக அரசியலுக்குள் வந்து விட்டோம். என் கணவர் சரத்குமார் முதல்வர் ஆகக் கூடாதா அவருக்கு அந்த தகுதி இல்லையா என்ன? “என்று கேள்விகளை எழுப்பி ஆச்சரியப்பட வைத்தார்.
அவருக்குப் பின்பு பேசிய நடிகர் சரத்குமார், “முதல்வர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? பிரதமர் ஆவதற்கே எனக்கு தகுதி இருக்கிறது. நானும் தாடி வைத்துள்ளேன். இனி நாங்கள் ஓரிரு சீட்டுக்காக கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். அதே மாதிரி தங்களது சின்னத்தில் போட்டியிடவும் வற்புறுத்தக்கூடாது. நாங்கள் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம். இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்” என்று அதிரடி காட்டியுள்ளார்.
சரத்குமாரின் இந்த பேச்சு அதிமுகவுக்கு விடுத்த பகிரங்க மிரட்டலா, இல்லை கேலி தொனியா என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவருடைய பேச்சிலிருந்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. அதிமுக கூட்டணியில் அவருக்கு ஒரு இடம்தான் கிடைக்கும் போல் தெரிகிறது. அதுவும் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதும் புரிகிறது.
2011ல் அவருடைய கட்சிக்கு ஜெயலலிதா இரண்டு சீட்டுகளை மட்டுமே கொடுத்தார். கடந்த தேர்தலில் ஒரு சீட் மட்டும் தந்தார்.
தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் சரத்குமாருக்கு சற்று துணிச்சல் வந்து இருப்பதாகவே தெரிகிறது. அதனால்தான் அவர் இப்படி பேசி இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம், அதிமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிகவின் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் 234 தொகுதிகளையும் சேர்ந்த 320 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எதிர் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கலாமா அல்லது திமுக கூட்டணிக்கு போகலாமா? என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பிரேமலதா பேசும்போது “கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காததற்கு அதிமுக தான் காரணம்”என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பாமக இருக்கும் கூட்டணியில் தங்கள் கட்சி இருக்காது என்பதையும் அவர் சூசகமாக குறிப்பிட்டார்.
ஏற்கனவே, முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் என்று பிரேமலதா பேசியதை அதிமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் பிரேமலதா, அதிமுக குறித்து விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுபற்றி அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “ஜெயலலிதா என்கிற ஆளுமை சக்தி இப்போது இல்லாதததால் பிரேமலதாவுக்கும், ராதிகாவுக்கும் கொஞ்சம் குளிர் விட்டுப் போய்விட்டது.
அரசியல் நாகரீகம் தெரியாமல் தங்கள் இஷ்டம் போல் பேசுகிறார்கள். கூட்டணியை சிதைக்கும் வகையில் கருத்தும் தெரிவிக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாமக இல்லாமல் போனால்தான் தங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற நப்பாசையில் பிரேமலதா பேசுகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 4 இடங்களை ஒதுக்கினோம். ஆனால் இவர்கள் போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலுமே மிகக் குறைவான ஓட்டுகள்தான் வாங்கினர். கொடுத்த காசையும் சரிவர செலவு செய்யாமல் போனது,தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியது போன்றவற்றின் விளைவாகத்தான் அக்கட்சிக்கு ஓட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு தொகுதியிலும் 3 லட்சம் வாக்குகளில் தோல்வி கண்டனர். ஒரு தொகுதியில் கூட இவர்களால் கடுமையான போட்டியை உருவாக்க முடியவில்லை. ஆனால் இப்போது துணிந்து 41 தொகுதிகள் கேட்கிறார்கள். இதை என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரத்குமாரோ தன்னை செல்வாக்கு பெற்ற ஒரு தேசிய கட்சியின் தலைவர் போல் நினைத்துக் கொண்டு பேசுகிறார்.
இதையெல்லாம் அதிமுக தலைமை நல்ல காமெடியாகவே எடுத்துக் கொள்ளும்” என்று அந்த நிர்வாகிகள் கூறினர்.
தேர்தல் நெருங்க, நெருங்க தமிழக அரசியல் களத்தில் இதுபோன்ற காட்சிகளை எல்லா கூட்டணிகளிலும் நிறைய காணலாம் என்பது மட்டும் உறுதி.
0
0