விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்வதில்லை… ஆனால் மதநல்லிணக்கம் பற்றி பேசுவதா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி..!!!

Author: Babu Lakshmanan
8 September 2021, 2:14 pm
Cm stalin - vinayagar chathurthi - updatenews360
Quick Share

சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லாத முதலமைச்சர் ஸ்டாலின், மதநல்லிணக்கம் பற்றி பேசுகிறார் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை சட்டம் மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், இந்த சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே, கடந்த மாதம் 28ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அவர் கூறியதாவது :- மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில்‌ நிறைவேற்றிய இந்தியக்‌ குடியுரிமைத்‌ திருத்தர்‌ சட்டம்‌ 2019, இந்திய நாட்டின்‌ அரசியலமைப்பு சட்டத்தில்‌ வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்‌ சார்ப்பின்மை கோட்பாட்டிற்கும்‌, நம்‌ நாட்டில்‌ நிலவி வரும்‌ மத நல்லிணக்கத்திற்கும்‌ உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது. மக்களாட்சித்‌ தத்துவத்தின்படி ஒரு நாட்டின்‌ நிர்வாகம்‌ என்பது அந்நாட்டில்‌ வாழும்‌ அனைத்து மக்களின்‌ கருத்தினையும்‌, உணர்வுகளையும்‌ உணர்ந்து அமைந்திருக்க வேண்டும்‌.

ஆனால்‌, இந்தக்‌ குடியுரிமைத்‌ திருத்தச்‌ சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின்‌ நிலை கருதி அரவணைக்காமல்‌, மத ரீதியாகவும்‌, எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள்‌ என்பதைப்‌ பொறுத்தும்‌ பாகுபடுத்திப்‌ பார்க்கும்‌ வகையில்‌ நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத்‌ தெரிகிறது. எனவே, இந்திய நாட்டின்‌ ஒற்றுமையையும்‌ மத நல்லிணக்கத்தையும்‌ போற்றிப்‌ பாதுகாக்கவும்‌, அரசியலமைப்புச்‌ சட்டத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள மதச்‌ சார்ப்பின்மைக்‌ கோட்பாட்டினை நிலைநிறுத்தவும்‌, ஒன்றிய அரசின்‌ இந்திய குடியுரிமைத்‌ திருத்தச்‌ சட்டம்‌, 2019-ஐ இரத்து செய்திட மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது, என தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது :- தமிழ்நாடு முதல்வர் சிஏஏ சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

தமிழ்நாடு முதல்வர் மத நல்லிணக்கம் குறித்துப் பேசியுள்ளார். சிஏஏ சட்டத்தால் இந்தியாவிலுள்ள எந்தவொரு இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு இல்லை. இதைத் தான் நான் சட்டசபையிலும் கூறினேன். இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்தவொரு கருத்தும் இல்லை. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற இந்து மத பண்டிகைக்குத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் மட்டும் இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் அவர் தான் இன்று மத நல்லிணக்கம் பற்றிப் பேசி உள்ளார்.

மத்திய அரசு தினமும் நாட்டின் நலம், பாதுகாப்பு கருதியே பாடுபட்டு கொண்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்திற்கு எதிராக நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். நாட்டின் நலம், பாதுகாப்பு கருதியே எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

Views: - 537

0

0