விநாயகர் சிலைகளை வைக்கவோ, ஊர்வலம் எடுத்துச் செல்லவோ தடை : மீறினால் கடும் நடவடிக்கை… போலீஸார் எச்சரிக்கை ..!!!

Author: Babu Lakshmanan
10 September 2021, 9:24 am
police - vinayagar - updatenews360
Quick Share

சென்னை : விநாயகர் சதுர்த்தியையொட்டி தடையை மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக, விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகளுடன் இந்த விழா கொண்டாடப்படும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதேவேளையில், வீடுகளில் தனிப்பட்ட முறையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அதனை நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்பை தொடர்ந்து வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்காக கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல, பூக்கடைகள், பழக்கடைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதனிடையே, அரசின் தடையை மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடப் போவதாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன. எனவே, சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

  • கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல் மற்றும் பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதே போல விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கூட்டமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனி நபர்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
  • சென்னையை பொறுத்தவரை, சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
  • மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள், இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
  • தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்து செல்லலாம். இங்கு வைக்கப்படும் சிலைகளை முறையாக விசர்ஜனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 175

0

0