தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அறிவிப்பு : இந்து முன்னணி மீது நடவடிக்கை கோரி மனு..!

17 August 2020, 2:13 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

சென்னை : அரசின் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என அறிவித்த இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது.

இது தொடர்பாக கடந்த 13ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கொரோனா நோய்‌ தொற்று பரவலை தடுக்கவும்‌, பொதுமக்கள்‌ நலன்‌ கருதியும்‌, பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர்‌ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்‌ செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில்‌ கரைப்பதோ, தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ அமலில்‌ உள்ள நிலையில்‌ அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர்‌ சதுர்த்தி பண்டிகையை அவரவர்‌ வீடுகளிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசின் இந்த உத்தரவை ஏற்க மறுத்த இந்து முன்னணி அமைப்பினர், தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும் என அறிவித்தது. மேலும், விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி பா.ஜ.க. வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், அரசின் தடையை மீறி தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும் என அறிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் தொடர்ந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0