ஓட்டு எண்ணிக்கைக்கு 25 நாள் இடைவெளி : பதற்றத்தை தணிக்க உதவுமா?

7 April 2021, 6:55 pm
Voting cover - updatenews360
Quick Share

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஜனநாயக தேர்தல் திருவிழா மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த சட்டப்பேரவை தேர்தலை ஒரு மாதம் முன் கூட்டியே நடத்த முடிவு செய்ததற்காக முதலில் தேர்தல் கமிஷனை பாராட்டியாக வேண்டும். இந்த முறை மே மாதம் 2-வது வாரத்தில் மட்டும் தேர்தலை நடத்தி இருந்தால் தமிழக மக்கள் மண்டையைப் பிளக்கும் வெயிலில் வாடி வதங்கிப் போய் இருப்பார்கள் என்பது நிச்சயம். அந்த வகையில் வாக்காளர்கள் அனைவரின் தலைகளும் தப்பியது பெரும் புண்ணியம்தான்.

தற்போது, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலேயே கூட கோடையின் கடுமையை உணர முடிகிறது. எனவே, அடுத்து வரும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்களை மார்ச் மாத இறுதிக்குள்ளாகவே நடத்தி முடித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 2-தேதி நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதாவது 25 நாட்கள் கழித்து நடக்கிறது.

எதற்காக இவ்வளவு கால இடைவெளி என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான். கடந்த சில தேர்தலுக்கு முன்புவரை ஓட்டுப்பதிவு முடிந்த 3-வது நாளிலேயே ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவித்து விடுவார்கள். வாக்குச்சீட்டு முறை இருந்தபோதும் கூட இதே நிலைதான் காணப்பட்டது.

தமிழகத்தில் 2006-ல் சட்டப்பேரவைத் தேர்தல் மே 8-ம் தேதி நடந்தது. அடுத்த மூன்று நாட்களில் ஓட்டு எண்ணிக்கை முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகி விட்டது. 2011 தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடத்தப்பட்டு சரியாக ஒரு மாதம் கழித்து மே 13-ம் தேதிதான் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வெயில் உச்சகட்டத்தில் இருந்த மே 16-ம் தேதி நடந்தது. என்றபோதிலும் அடுத்த மூன்று நாட்களிலேயே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை 2009-ல் தமிழ்நாட்டில் மே 13-ம் தேதி தேர்தல் நடந்து அடுத்த 3 தினங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல் 2014 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24-ம் தேதி நடந்தது. ஆனால் முடிவுகள் அறிவிக்கப்பட்டதென்னவோ
மே 16-ம் தேதிதான். 2019 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடந்தது. மே 23-ம் தேதிதான் முடிவுகள் வெளியானது.

election commission updatenews360

இந்த 3 நாடாளுமன்ற மற்றும் மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களின் அடிப்படையில் பார்த்தால் ஒரே ஒரு உண்மை மட்டும் புலப்படும். அதாவது தலைமை தேர்தல் கமிஷனர்கள் பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தேர்தல் தேதியை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இப்போதுதான் முந்தைய தேர்தல்கள் போல் இல்லாமல் மிகவும் முன்கூட்டியே சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ல் தேர்தல் நடந்தது.

வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடந்தால், அண்டை மாநிலங்களான இந்த மூன்றிலும் இருந்தும் வெளியாட்கள் ஊடுருவி விடுவார்கள் என்பதற்காக இப்படி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கூட மே 2-ந் தேதிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
மாநிலத்தில் 89 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 10 ஆயிரம். அதாவது 10-ல் ஒன்று பதற்ற வாக்கு சாவடி.
இதில் மிகவும் பதற்றமானவையாக 537 வாக்குச்சாவடிகள் இருந்தன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுபோன்ற ஒரு அசாதாரண சூழல் நிலவியது, இதுவே முதல் முறை ஆகும்.

45 ஆயிரம் வாக்குச்சாவடிகளை சிசிடிவி கேமரா மூலம் தேர்தல் கமிஷன் கண்காணித்தால் பதற்றம் கொஞ்சம் தணிந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்த தொகுதிகளின் மின்னணு எந்திரங்கள் அனைத்தையும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 25 நாட்கள் வரை அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய கட்டாயம் காவல்துறைக்கும், துணை ராணுவத்துக்கும் உள்ளது. மொத்தம் 75 மையங்களில் 234 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

Cbe Vote Seal And Safe -Updatenews360

வாக்கு எண்ணிக்கை மையங்களின் ‘ஸ்டராங் ரூம்’களில் என்னதான் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி கண்கொத்தி பாம்பாக பார்த்தாலும் கூட இந்த 25 நாள் இடைவெளியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி, ‘சீல்’கள் அகற்றம், ரகசியமாக சென்று பார்வையிட்ட அதிகாரி… என்று வழக்கமாக புகார்களும் எழுவதும் இருக்கும்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கட்சி சார்ந்தோர் மிக அதிகம். இதனால்தான் தேர்தல் நேரத்தில் மொட்டை போட பந்தயம் கட்டுவது அதிகம் நடக்கும். வெற்றி பெற்ற கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்வதுடன் நாள் முழுவதும் பட்டாசும் வெடிப்பார்கள்.
இது எதிர்த் தரப்பினருக்கு எரிச்சலும், கோபமும் தருவதாகவும் இருக்கும். பல நேரங்களில் வாய்த் தகராறில் ஈடுபட்டு அது கைகலப்பிலும் முடிவது உண்டு.

தேர்தல் நடந்து அடுத்த மூன்று நாட்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது வாக்குப்பதிவு நாளின்போது இருந்த பதற்றம் தொடர்ந்து அப்படியே நீடித்துக் கொண்டே இருக்கும். அது சில நேரங்களில் எல்லை மீறிப் போய் அடிதடி, வெட்டு, குத்து போன்ற அசம்பாவித சம்பவங்களிலும் முடியும்.

அதேநேரம், ஓட்டு எண்ணிக்கையை மூன்று வாரமோ, ஒரு மாதமோ தள்ளி வைத்துவிட்டால் அரசியலில் ஆர்வம் கொண்டவர்களிடம் தேர்தல் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு படிப்படியாக குறைந்து விடும். கட்சிகளில் தீவிர ஆர்வம் காட்டும் ஒரு சிலரிடம் மட்டுமே இந்தப் பதற்றம் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரியும் வரை நீடித்துக் கொண்டே இருக்கும்.

இந்தப் பதற்றத்தையும் கூட தணிக்கும் விதமாகத்தான், தேர்தல் கமிஷன் இப்படி ஓட்டு எண்ணிக்கைக்கான இடைவெளியை அதிகமாக்கியுள்ளது என்றே சொல்லவேண்டும்.

வட மாநிலங்களில் இதுபோன்ற பதற்றம் இல்லையா? என்று கேட்கலாம். தமிழக மக்களிடம் இருப்பது போன்ற அரசியல் ஆர்வம், மோகம் மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் உள்ளது. இதனால் தேர்தல் வன்முறைகள் அதிகமாக நடக்கும். எனவே அங்கு கூடுதலாக துணை ராணுவம் எப்போதும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஏதாவது வன்முறை, கலவரம் என்றால் உடனடியாக ஒடுக்கி விடுவார்கள். மற்ற மாநிலங்களில் இந்த ஆர்வம் வெகு குறைவு.

தமிழகத்தில் பீகார், உத்தர பிரதேசம் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்காது என்பதே மகிழ்ச்சியான செய்திதான்! இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இப்படி ஓட்டு எண்ணிக்கையை 25 நாள் இடைவெளிவிட்டு தள்ளி வைத்திருப்பதும் நியாயமான ஒன்றாகவே தோன்றுகிறது.

Views: - 0

0

0

Leave a Reply