ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் : 4 பேருக்கு போலீசார் சம்மன்..!!
8 April 2021, 11:13 amசென்னை : சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனிடையே, நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் வைத்து இரு தேர்தல் பணியாளர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது, அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, வேளச்சேரி தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தி வந்தார்.
இதனிடையே, ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பழுதான மற்றும் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் எடுத்துச் செல்லப்பட்டது என்று தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் இருசக்கர வாகனத்தில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு விவிபேட் இயந்திரங்களை கொண்டு சென்ற விவகாரத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர் சரவணன் உள்பட 4 பேருக்கு போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
0
0