‘சென்னையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்’ : வார்னரின் விட்டுப்போகாத பாசம்..!!
25 November 2020, 7:01 pmசென்னை : நிவர் புயல் பாதிப்பிற்குள்ளாகியுள்ள சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த நிவர் புயல் இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நிவர் புயல் பாதிப்பிற்குள்ளாகியுள்ள சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.
பொதுவாக, ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்திய மண் மீதான அன்பு இயற்கையானதுதான். அந்த வகையில், இந்தியாவை அதிகம் விரும்பும் வீரர்களில் ஒருவரான வார்னரின் இந்தப் பதிவு தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.