கனிமொழியின் “இந்தியரா” ட்வீட்..! இந்தி எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறதா திமுக..? பரபரப்புப் பின்னணி..!

9 August 2020, 7:16 pm
Kanimozhi_UpdateNews360
Quick Share

திமுக தலைவர் கனிமொழி இன்று ஒரு விமான நிலையத்தில் தனது அனுபவத்தை விவரித்தார். அங்கு அவர் இந்தி பேசாததால் அவர் ஒரு இந்தியரா என்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி கேட்டதாகக் கூறி பரப்பரப்பைக் கிளப்பியுள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதிருந்து இந்தி அறிந்து கொள்வது இந்தியராக இருப்பதற்கு சமமானது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில் அவருடைய ட்விட்டர் பதிவில் பதிலளித்த சிஐஎஸ்எஃப், சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிப்பதற்காக அவருடைய பயண விவரங்களைக் கேட்டுள்ளது.
சிஐஎஸ்எஃப் மேலும் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப் கொள்கை அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக பேசிப்பேசியே வளர்ந்த கட்சியாக கருதப்படும் திமுக, தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை 2020’ல் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்து வருகிறது.மும்மொழிக் கொள்கையில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றொரு இந்திய மொழி பயில்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மும்மொழிக் கொள்கை என்பது இந்தியைத் திணிப்பதற்காகத்தான் என திமுக வரிந்து கட்டிக்கொண்டு குரல்கொடுத்து வரும் நிலையில், திமுகவின் எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் அவ்வளவாக பேசப்படாத நிலையில் “தமிழ் பேசுபவர்கள் இந்தியர்கள் இல்லையா?” எனக் கேள்வியெழுப்பி மக்கள் கனத்தை ஈர்ப்பதற்காகவே தான் இந்த பதிவு ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் நடந்து கொல்வதற்கு தனியாக விதிமுறைகள் உள்ள நிலையில், கனிமொழியிடம் இந்தியரா என ஒரு அதிகாரி கேள்வியெழுப்புவதற்கு வாய்ப்பே இல்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில், இந்தி எதிர்ப்பு என முன்னிலைப்படுத்தி, தேர்தல் அரசியலில் பலன் பெறவே இது போன்ற பதிவுகள் திமுகவால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.