திடக்கழிவு மேலாண்மையில் புதிய திட்டம் அறிமுகம் : குப்பைக்கு ‘குட் பை’ சொல்லுமா சென்னை?

Author: Babu
3 October 2020, 8:07 pm
Chennai garbage- updatenews360
Quick Share

சென்னை: உலகின் மிகப்பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்று. மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மூலைமுடுக்குகளிலில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மட்டுமின்றி வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், நொடிதோறும் குவியும் மனிதர்களின் கூட்டத்துக்கு வாழ்வளிப்பது சென்னை மாநகரம். அத்தனைபெரும் வேலைபார்த்து, உண்டு, உறங்கி, பொழுதுபோக்கி வருவதுடன் சென்னையின் மடியில் குப்பையைக் குவித்து வருகின்றனர்.

நீலக்கடலும், நிலவொளி தவழும் மணல்வெளிக் கரையும் நகரின் சிறப்புகள். ஆனால், அலைஅலையாக மோதும் மானிட சமுத்திரம் மலைமலையாகக் குப்பை கொட்டி வருவதால் சென்னையில் ‘எங்கெங்கு காணிடும் குப்பையடா’ என்று பாடும் நிலையே உள்ளது. மனிதரில் இத்தனை நிறங்களா என்று கேட்பதைப் போல, குப்பையில் இத்தனை வகைகளா என்று சென்னைக்குப் புதிதாக வருபவர்கள் மூக்கின்மேல் விரல் வைப்பதுடன் மூக்கையும் மூடிக்கொள்வார்கள். தொழிற்சாலைகளின் விதவிதமான கழிவுகள், வர்த்தக நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் தினந்தோறும் கொட்டுபவை, மருந்துக் குப்பிகள், மாத்திரை உறைகள், நசநசத்துப்போய் அழுகிய வாடைவீசும் உணவுக்கழிவுகள், கறிக்கடைக் கழிவுகள், தடைகளைத் தாண்டிக் குவியும் நெகிழிப்பொருள்கள், பழைய எலக்ரானிக் சாதனங்கள், மின் குப்பைகள் அனைத்தும் சேர்ந்ததே சென்னையின் குப்பைகள்.

waste - updatenews360

இந்தக் குப்பைகளை மக்கும் குப்பையாகவும், மக்காத குப்பையாகவும் அவரவர் வீடுகளில் பிரித்துத் தருவது சரியானதாக இருக்கும். ஆனால், பல இடங்களில் இருந்து சென்னையில் குவிந்து இருப்பவர்களுக்கு குப்பையிலும் பிரிவினை பிடிப்பதில்லை. குப்பைகளையும் பெரும்பாலும் கலந்தே கொட்டுகிறார்கள். சென்னையில் வாழ்ந்து ‘குப்பை கொட்டுவது’ எளிதான வேலையல்ல. அந்த குப்பையை அகற்றுவது அதைவிடக் கடினமான வேலை. மேல்நாடுகளில் குப்பையை அகற்றுவது நவீனத் தொழில்நுட்பம் பெருமளவு ஈடுபடுத்தப்படும் அறிவியல் துறையாகும். சென்னையிலும் அந்த நவீனத்தின் வாடை விரைவில் வீச இருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைத் தனியார் பங்களிப்புடன் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

சென்னையில் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் நாள்தோறும் கொட்டப்படுகின்றன. வீடுவீடாகச் சென்று 19,467 பணியாளர்கள் குப்பையைப் பெற்று அவற்றை மக்கும் குப்பையாகவும் மக்காத குப்பையாகவும் பிரித்துவருகிறார்கள். ஈரக் கழிவுகளில் இருந்து இயற்கை உரமும் உயிரி வாயுவும் தயாரிக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுவருகின்றன. மீதமுள்ள குப்பைகள் பெருங்குடியிலும் கொடுங்கையூரிலும் கொட்டப்பட்டுவருகின்றன.

இயற்கை உரமும் எரிவாயுவும் தயாரிப்பதும் மறுசுழற்சி செய்வதும் மெதுவாகவே நடைபெறுவதால் பெருங்குடியிலும் கொடுங்கையூரிலும் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் பெருகிவருகின்றன. கால்நடைகளின் நவீன மேய்ச்சல் நிலமாக மாறியிருக்கும் இந்தப் பகுதிகள் நோய்களின் உற்பத்திசாலைகளாக இருக்கின்றன. அடிக்கடி குப்பைகள் கொளுத்தப்படுவதால் அந்தப் புகையின் நாற்றம் வாகனங்களில் செல்வோருக்கும் அருகில் வசிப்போருக்கும் கண் எரிச்சலையும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன.

சென்னையின் பல இடங்களிலும் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் குப்பைகள் வாரப்படாமல் இருப்பதால் ஏற்படும் கெட்ட நாற்றமும் நோய்களும் கொசுத்தொல்லையும் அன்றாடப் பிரச்சினைகளாகும். இதுபோன்ற புகார்களை இனிமேல் ஆறு மணி நேரத்தில் தீர்க்க முடியும் என்று கூறுகிறது மாநகராட்சி. இப்போது மேல்நாடுகளில் குப்பை அகற்றும் நிறுவனம் ஒன்றுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. செயல்திறன் குறியீடுகள் அடிப்படையில் பணிகள் கண்காணிக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில்தான் ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று புதிய முறையை விளக்கியுள்ளது மாநகராட்சி.

இதற்காக 125 காம்பாக்டர்களும் 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர்களும், 3,000 இ-ரிக்சாக்களும் 11,000 காம்பாக்டர் குப்பைத்தொட்டிகளும் களத்தில் அதாவது குப்பையில் இறங்குகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் இயற்கை உரம் தயாரிக்கும் நிலையங்களுக்கும் எரியூட்டும் மையத்துக்கும் உயிரி வாயு நிலையம், தோட்டக்கழிவு மற்றும் தேங்காய் மட்டை பதனிடும் மையம் ஆகிய மையங்களில் நேரடியாக சேர்க்கப்படும்.

குப்பைகள் தேங்காமல் விரைவில் அகற்றப்படுவதோடு சென்னையில் மண்ணும் காற்றும் மாசுபடாமல் சுற்றுச்சூழலையும் காக்க இந்த நடவடிக்கை உதவும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். விரைவில் குப்பைக்கு ‘குட் பை’ சொல்லும் சென்னை என்று ஆவலோடு மக்கள் காத்திருக்கின்றனர்.

Views: - 80

0

0