ஓட்டு போட்டோம்.. வேட்டு வைத்துவிட்டார்கள் : புலம்பும் டெல்டா விவசாயிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2021, 6:02 pm
Farmers unhappy- Updatenews360
Quick Share

தமிழக அரசின் சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் அண்மையில் விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதில், ‘2021-2022-ம் ஆண்டில் காரீப் பருவப் பயிர்களான நெல் மற்றும் தட்டைப் பயறு தவிர மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளிக் கிழங்கு, வெங்காயம், உருளைக் கிழங்கு, மஞ்சள்,
சிவப்பு மிளகாய், தக்காளி வெண்டைக்காய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் வருகிற 31-ம் தேதி வரை காப்பீடு செய்யலாம்.

Easy Ways To Fit Fruits & Vegetables Into Your Diet | Henry Ford LiveWell

எனினும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காரீப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய இயலாத பயிர்களுக்கு முக்கியமாக, நெற்பயிர் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு அடைய நேரிட்டால் மாநில பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது. இது விவசாயிகளிடம் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி இருக்கிறது.

திமுகவை புகழ் பாடுவதில் மற்ற விவசாயிகள் சங்கத்தினரைவிட எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருக்கும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனே கூட கொந்தளித்து இருப்பதுதான் இதில் ஆச்சர்யம்.

PR Pandian

அவர் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தமிழக அரசு நெல்லுக்கு காப்பீடு செய்ய மறுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நம்பிய விவசாயிகளை ஏமாற்றும் செயலில் அரசு ஒருபோதும் ஈடுபடக்கூடாது. இது, தமிழக அரசின் பொறுப்பற்ற செயல். சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், நெல்லுக்கு காப்பீடு செய்ய முடியாது என்கிற கொள்கை முடிவை எடுக்கிறபோது, வேளாண்மை துறை அறிக்கை மூலமாக வெளிப்படுத்துவது தமிழக சட்டப் பேரவை மரபை மீறிய செயல். எனவே, காப்பீடு குறித்தான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இது தொடர்பாக சட்டப் பேரவையிலும், விவசாயிகளிடத்திலும் விரிவான விவாதத்திற்கு உட்படுத்தப்படவேண்டும்.

MK Stalin says DMK would continue to urge Centre to scrap CAA | Latest News  India - Hindustan Times

காப்பீடு வழங்குவது குறித்து அரசு மவுனம் காப்பது ஏற்கத் தக்கதல்ல. காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீட்டை பெற்றுத்தரும் பொறுப்பை தமிழக அரசு தட்டிக்கழிக்க கூடாது. இப்படி அறிக்கை மூலம் தெரிவிப்பது விவசாயிகளை மீண்டும் தற்கொலை முயற்சிக்கு தள்ளும் என எச்சரிக்கிறேன். இதுகுறித்து மறுபரிசீலனை செய்து உரிய விளக்கம் அளிக்காவிட்டால் வருகிற 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் நெருக்கடிக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்’’என்று ஆவேசமாக கூறினார்.

டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், “நெற்பயிருக்கு காப்பீடு இல்லை என்று சொல்வது கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் குறுவை நெல் சாகுபடி நடந்துள்ளது.

நெற்பயிர்களுக்கு ஏதேனும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இது ஏற்க இயலாத ஒன்று. ஏனென்றால் நெற்பயிர்களில் முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் காப்பீட்டு திட்டத்தால் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீட்டுத்தொகையை விவசாயிகளால் பெற முடியும்.

ஆனால் மாநில பேரிடர் நிதியிலிருந்து கொடுத்தால் ஏக்கருக்கு அதிகபட்சமாகவே
10 ஆயிரம் ரூபாய் வரைதான் கிடைக்கும். நெற்பயிர்களுக்கு காப்பீடு வழங்க தனியார் நிறுவனங்கள் முன் வரமறுத்தால் தமிழக அரசே இத்திட்டத்தை செயல்படுத்தலாம்” என்று யோசனை தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:  பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தல் ...

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறும்போது, “வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார்தட்டிக் கொண்ட திமுக அரசு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை கைவிட்டு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து விவசாயிகளின் உரிமைகளை தட்டி பறித்துள்ளது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பலலட்சக்கணக்கான விவசாயிகள் வியர்வை
சிந்தி உழைக்கும் உழைப்பை அலட்சியப்படுத்தும் இச்செயலை விவசாய விரோத திமுக அரசு திருத்தி கொள்ள வேண்டும். உடன் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும்” என்று வலியிறுத்தி இருக்கிறார்.

அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் அதிமுக கூட்டணி கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது.

Ignored by AIADMK, smaller allies seek refuge in DMK camp - DTNext.in

ஆனால் 40 லட்சம் டெல்டா விவசாயிகளில் பெரும்பான்மையானோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்ததால்தான், மொத்தம்159 தொகுதிகளை அக்கூட்டணியால் கைப்பற்ற முடிந்தது. டெல்டா மாவட்டங்களில் சரிபாதி தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியிருந்தால் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். அதனால்தான் திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்துவிட்டு, தற்போது திமுக அரசு தங்களுக்கு வேட்டு வைத்துவிட்டதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

ஒருவேளை, அதிக அளவில் விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீட்டு தொகை பெறுகிறார்கள் என்று சந்தேகம் வந்தால் அதை கண்காணிக்கவேண்டிய பொறுப்பு அரசினுடையது. அதில் ஏதாவது முறைகேடுகள் நடப்பதாக தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் தமிழக அரசின் கடமைதான். அதற்காக தங்களுக்கு வாக்களித்த விவசாயிகளை பாதிக்கும் விதமாக இந்த முடிவை திமுக அரசு எடுத்திருப்பது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டனர்.

Views: - 315

0

0