‘பழைய ஓய்வூதியத் திட்டம் என்ன ஆச்சு…?’ கேள்விக்கணைகளால் திக்கிமுக்காடும் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 5:17 pm
Quick Share

நீண்டகால கோரிக்கை

2003-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்குமான
பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் நீண்ட கால கோரிக்கை.

இதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் அவர்கள் நடத்தாத போராட்டங்களே கிடையாது.

அதேநேரம் திமுக ஆட்சியின்போது ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அரசுக்கு எதிராக அவ்வளவாக ஆவேசம் காட்டமாட்டார்கள். இதற்கு காரணம் திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும் என்பதுதான்.

தவிர திமுக ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் நேரத்தில் அவர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் அரசின் முதல் வேலையாகவும் இருக்கும்.

திமுக உறுதி

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது முக்கிய வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்து 16 மாதங்கள் ஆகியும் கூட பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து இதுவரை எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அது பற்றிய பேச்சே இல்லை.

Stalin - Updatenews360

இது திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை, சிலிண்டர் மானியம் 100 ரூபாய் போன்றவற்றுடன் இணைத்து எதிர்க்கட்சிகள் கேலி பேசும் அளவிற்கும் மாறிப்போனது.

இதுதொடர்பாக ஜாக்டோ, ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கவும் செய்தனர். ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை.

எதிர்பார்ப்பு வீண்

இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஜாக்டோ-ஜியோ
அமைப்பினரின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத்திடலில் நடந்தது.ஏற்கனவே இதில் கலந்து கொள்ளும்படி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அந்த அமைப்பினர் அழைப்பும் விடுத்திருந்தனர். அதன்படி அவரும் பங்கேற்றார்.

இதனால் இந்த மாநாட்டில் முதலமைச்சர் பேசும்போது பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பை நிச்சயம் வெளியிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் அவர்களிடம் ஏற்பட்டது.

மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, “நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமே காரணம். உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் உங்கள் துறை சார்ந்த அமைச்சரிடம் முறையிடலாம். அது என் கவனத்துக்கு அவ்வப்போது வந்து சேரும். அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தேன். அதை மறுக்கவில்லை. மறைக்கவும் இல்லை. உங்கள் கோரிக்கைகளை திமுக அரசு நிச்சயம் நிறைவேற்றி தரும். நிதி நிலை சரியானதும் அறிவிப்புகள் வெளிவரும்” என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் கடைசியாக சொன்ன வார்த்தைகள்தான் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள பெரும்பான்மையான நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து அவர்களில் சிலர் கூறியதாவது:-

“விடியல் தருவோம் என்று கூறி விட்டு, எங்களை மேலும் இருளில் தவிக்க விட்டு விட்டனர். இந்த ஆட்சி வந்த 16 மாதங்களில், பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

11 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், பணி நிரந்தரத்துக்கான எந்த நம்பிக்கையான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மாநாட்டிலும் முதலமைச்சர் இதுபற்றி அறிவிக்கவில்லை. அதனால் இந்த மாநாடு மிகுந்த ஏமாற்றமே தருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எதுவும் குறிப்பிடவில்லை. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பது குறித்தும் அவர் பேசவில்லை. இந்த மாநாடே ஏமாற்று வித்தையாகி விட்டது.

அரசு ஊழியர்களிடம், புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி பிடித்தம் செய்த தொகையும், ஊழியர்களுக்கு அரசு பங்களிக்க வேண்டிய தொகையும், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இதை முறைப்படுத்தி, பழைய ஓய்வூதிய திட்டத்தை, முதலமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மாநாட்டிற்கு பெருமளவு திரண்டு வந்திருந்தனர். ஆனால், ஸ்டாலின் பேச்சு பெருத்த ஏமாற்றமே தருகிறது.

வாழ்வாதார நம்பிக்கையுடன் வந்தவர்கள் கடும் கோபத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. எங்களால்தான் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று பெருமிதப்பட்டுக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை விரைவில் தனியாக அழைத்து பேச்சு நடத்த முன் வரவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

தவிர பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதில் தற்போதைய நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜனுக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். அதற்கு எங்கே போவது? என்று அவர் கேட்பதால்தான் இப்பிரச்சினை நீடித்துக் கொண்டே போகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையை படித்து பார்க்காமலா, அவர் நிதியமைச்சராக பொறுப் பேற்றுக்கொண்டார்? என்று எங்களாலும் எதிர் கேள்வி கேட்க முடியும். ஆனால் அப்படி குதர்க்கமாக கேள்வி எழுப்ப எங்கள் மனம் விரும்பவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலத்தின் நிதி நிலை சீரானதும் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று இப்போது கூறுகிறார்!…

பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நில பத்திரப்பதிவு கட்டணம், கடுமையான சொத்துவரி உயர்வு, தற்போது கூடுதல் மின் கட்டண அறிவிப்பு போன்றவை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதுதான் புரியவில்லை” என்று அந்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

நிலைமை மாறவேண்டும்

இந்த மாநாட்டில் நிர்வாகிகள் சிலர், ஆளுங்கட்சியை புகழ்ந்தும், முந்தைய முதலமைச்சர்களை இகழ்ந்தும் பேசியதாக கூறப்படுவது பற்றி சில ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகையில்,” தங்களின் சுயநலனுக்காக ஆளுங்கட்சியை துதி பாடியதும், மற்ற கட்சியினரை அவதூறாக பேசியதும் அநாகரிகம். அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி, அரசு சம்பளம், ஓய்வூதியம் பெறுவோர், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது சட்ட விரோதம். அதனால் சம்பந்தபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

சமூக நல ஆர்வலர்களோ, “அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி புரிபவர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்களில்தான் சேர்த்து படிக்க வைக்கின்றனர். பாடம் சொல்லிக் கொடுப்பதில் தங்கள் மீது தங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசு ஊழியர்களில் 80 சதவீத பேர் லஞ்சம் பெறாமல் எந்தவொரு நலத் திட்டத்திலும் பயனாளிக்கு ஒப்புதல் வழங்குவது கிடையாது. இந்நிலைமை மாறவேண்டும். அப்போதுதான் சமூகம் மேம்படும்” என்று ஆதங்கப்படுகின்றனர்.

Views: - 445

0

0