அதிமுகவிடம் கோவையை கேட்கும் கமல்…மக்கள் நீதி மய்யத்துக்கு வலை வீசும் அமமுக….?

Author: Babu Lakshmanan
24 October 2023, 9:14 pm

2024 தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து கோவை தொகுதியில் போட்டியிட விரும்பிய நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யதிற்கு இதுவரை இந்த இரு கட்சிகளிடம் இருந்தும் எந்த பாசிட்டிவான பதிலும் கிடைத்ததாக தெரியவில்லை.

இதற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்று. காங்கிரசை பொறுத்தவரை,
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு இது பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வந்தால், அதன் அடிப்படையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தி குறைந்த பட்சம் 12 எம்பி சீட்டுகளை எப்படியும் வாங்கி விடவேண்டும் என்பதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மிகவும் உறுதியாக இருக்கிறார். இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவினால் காங்கிரசுக்கு 5 தொகுதிகளுக்கு மேல் திமுக ஒதுக்காது என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

இதுபோன்ற சூழலில், நடிகர் கமல் கட்சிக்கும் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டு அறிவாலயத்திடம் நெருக்கடி கொடுக்க காங்கிரசால் இயலாது, அதுவும் கோவை தொகுதியை கமலுக்கு விட்டுக் கொடுங்கள் என்று கேட்பதும் கடினம். இதனால் என்னதான் ராகுல் காந்தியிடம் நெருக்கமான நட்பை கொண்டிருக்கும் நிலையிலும்
கூட கமல்ஹாசனுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாமல் தமிழக காங்கிரஸ் தவியாய் தவிக்கிறது.

அதேநேரம் திமுகவும், மக்கள் நீதி மய்யத்தை தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்வது பற்றி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் வேண்டுமானால் தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஒரு எம்பி தொகுதியை கமலுக்கு விட்டுக் கொடுக்கட்டும் என்று நினைக்கிறது. அதேநேரம் கோவை அல்லது தென் சென்னை தொகுதியை அவருக்கு ஒதுக்கிட திமுகவுக்கு துளியும் விருப்பமில்லை.

கோவையை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனுக்கு
கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களில் வலதுகரமாக திகழ்ந்து பின்னர் திமுகவுக்கு தாவிய மகேந்திரனுக்கு ஒதுக்கிட நினைக்கிறது.

தென் சென்னையிலோ, அமைச்சர் உதயநிதியின் முழுமையான அபிமானத்தை பெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுக்கு இன்னொரு முறை போட்டியிடும் வாய்ப்பை அளிப்பதற்கு திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கோவையில் போட்டியிட முடிவு செய்து அதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தி தேர்தல் பணிகளை தொடங்க இருந்த நிலையில் இப்படியொரு இடியாப்ப சிக்கல் முளைத்திருப்பது கமலுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் அவருடைய பார்வை தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவையும், டிடிவி தினகரனின் அமமுகவையும் நோக்கி திரும்பி உள்ளது என்பது நிஜம்!

அதிமுக கூட்டணியில் இணைந்தால் கோவை தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் 2024-ல் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் எனக் கணிக்கப்படும் கொங்கு மண்டல தொகுதிகளில் ஒன்றாக கோவையும் இருக்கிறது. அதனால் அத்தொகுதியை அதிமுக எளிதில் விட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகம்தான். வேண்டுமென்றால் மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கலாம். இல்லையெனில் தென் மாவட்டங்களில் தேனி அல்லது திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

இந்த இரண்டில் ஒரு வாய்ப்புதான் நடிகர் கமலுக்கு கிடைக்கும் என்பதால் அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் தயக்கம் காட்டி வருகிறது.
அதேநேரம் ராஜ்யசபா எம்பி ஒன்றை அதிமுக தர முன் வந்திருப்பதாக கூறப்படுவதால் அக்கட்சியுடனே கூட்டணி அமைக்க முடிவு எடுக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.

நடிகர் கமல் அதிமுக பக்கம் சாய்வது டிடிவி தினகரனுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யத்தை எப்படியாவது தனது கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியும் விட்டார்.

பாஜக தலைமையில் அமையும் கூட்டணியில்தான் இணைவேன் என்று அண்மையில் டிடிவி தினகரன் சூசகமாக கூறி இருந்தாலும் கூட மக்கள் நீதி மய்யத்தை தனது அணியில் சேர்த்துக்கொள்ள டிடிவி தினகரன் விரும்புவது நன்றாகவே தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம், 2019 தேர்தலில் மக்கள் நீதி மய்யமும், அமமுகவும் ஒட்டுமொத்தமாக பெற்ற 38 லட்சம் வாக்குகள்தான். இந்த இரு கட்சிகளும் இணைந்து மொத்தம் 9.5 சதவீத ஓட்டுகளை அப்போது பெற்றன. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமையாமல் போனால் மக்கள் நீதி மய்யத்துடன் சேர்ந்து வலிமையை நிரூபிக்கலாம் என்று டிடிவி தினகரன் கணக்கு போடுகிறார்.

இந்த இரு கட்சிகளும் இன்னும் சில சிறு சிறு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கவும் செய்யலாம். இது நடந்து விட்டால் கமல் கோவையிலும், டிடிவி தினகரன் வடசென்னையிலும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

“நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் அமமுக கூட்டணி அமைப்பதற்கு வேறு சில முக்கிய காரணங்களும் உண்டு” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் முக்குலத்தோர் மீது மிகுந்த பற்று கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன், அச்சமுதாய மக்கள் பாராட்டும் படியாக சில திரைப்படங்களையும் எடுத்துள்ளார். அதன் தாக்கம் தென் மாவட்டங்களில் இன்றளவும் உள்ளது. தவிர அவர் ஒரு பிரபல நடிகர் என்பதால் அவருடைய கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் வரை கிடைக்கலாம். தனது கட்சிக்கு தென் மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று டிடிவி தினகரன் உறுதியாக நம்புகிறார்.

இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமலே ஐந்தாறு தொகுதிகளை எளிதில் கைப்பற்றி விட முடியும் என்று டிடிவி தினகரன் நினைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் கடும் 5 முனை போட்டி நிலவினால் இதெல்லாம் சாத்தியமே என்றும் அவர் கருதுகிறார். மேலும், இது கமல் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை தடுத்தது போலவும் ஆகிவிடும்.

அதேநேரம் டிடிவி தினகரன் எப்படி வட சென்னையில் போட்டியிட விரும்புவார் என்ற கேள்வி எழலாம். 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 89 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி கண்டு இருந்தார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரம்பூர், கொளத்தூர், திருவொற்றியூர், திரு வி க நகர், ராயபுரம் ஆகிய இதர 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அவருடைய கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது, என்கிறார்கள்.

எந்த தேர்தல் என்றாலும் இனி அவரால் மீண்டும் சென்னை நகர தொகுதிக்குள் போட்டியிடவே முடியாது என்று பலர் ஏளனமாக பேசினாலும் கூட அதை பொய் என்று நிரூபித்து வெற்றி காணவேண்டும் என்கிற வேட்கை டிடிவி தினகரனிடம் எப்போதுமே உண்டு. அதனால் 2024 தேர்தலில் வட சென்னை தொகுதியில் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் இணைந்து ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் கூட ஒரு ராஜ்ய சபா எம்பி சீட் உறுதி என்பதால் எடப்பாடி பழனிசாமி பக்கமே நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் சாயவும் செய்யலாம். அதிமுகவிடம் 62 எம்எல்ஏக்கள் இருப்பதால் நிச்சயம் இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் உறுதி என்ற நிலையில் தனக்கும் அதில் ஒரு பதவி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை கமலுக்கு நிறையவே இருக்கிறது.

ஆனால் எல்லா தேர்தல் செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு பைசா செலவு செய்யவேண்டாம். சிவகங்கை அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று டிடிவி தினகரன் தரப்பில் உறுதி அளிக்கப்படுவதால் கமல்ஹாசன் தடுமாற்றத்தில் இருக்கிறார்”என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

நம்மை யாராவது கூட்டணியில் சேர்த்து கொள்ளமாட்டார்களா? என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த நடிகர் கமலுக்கு அதிமுக, அமமுக கட்சிகளின் அழைப்பால் அதிர்ஷ்டம் அடித்ததுள்ளது என்றே சொல்ல வேண்டும்!

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 318

    0

    0