குறைந்த வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?… திமுக, அதிமுக, பாஜக திக் திக்!

Author: Udayachandran RadhaKrishnan
20 April 2024, 9:13 pm
DMK All
Quick Share

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 2019 தேர்தலை விட குறைவு என்றாலும் கூட பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தது போல ஓட்டு பதிவு சதவீதம் 80-ஐ நெருங்கவில்லை.

அதேநேரம் 2009 தேர்தலில் 73.02 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதேபோல் கடந்த 2014ம் ஆண்டு மிக அதிக பட்சமாக 73.74 சதவீதமும் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 72.47 சதவீதமும் பதிவானது.

முதலில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் 19ம் தேதி இரவு 7.30 மணி அளவில் தமிழகத் தேர்தல் ஆணையம் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்தது. ஆனால் நள்ளிரவு 12.20மணி அளவில் 69.46 சதவீதம் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

2009, 2014, 2019 என மூன்று நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தற்போதைய தேர்தலில் ஓட்டுப்பதிவு 3 சதவீதம் குறைவாக இருப்பதைக் காண முடிகிறது.

இதற்கு கூறப்படும் முக்கிய காரணங்கள் இவைதான்.

கடுமையான வெயிலின் தாக்கத்தால் பிற்பகலில் மக்கள் பலர் வாக்களிக்க வரவே இல்லை. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை மற்றும் கோடை விடுமுறை என்பதால் பலர் குடும்பத்தினர் சுற்றுலா சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் தேர்தலில் ஆர்வம் கொள்ளவில்லை.

நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

தேர்தல் ஆணையம் இன்னும் விழிப்புணர்வு பணிகளில் அதிகம் ஈடுபட்டு இருக்கலாம். கடைசி இரண்டு வாரங்களில்தான் 100% வாக்கு பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டது. இதைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தொடங்கியிருக்கவேண்டும்.

பல இடங்களில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் பெரிதாக பூத் கமிட்டி போட்டு மாற்று கட்சியினரை வாக்களிக்க ஊக்குவிக்கவில்லை” என்று குறைந்த வாக்கு பதிவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஆனால் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை கடும் நான்கு முனை போட்டி நிலவுவதால் 80 சதவீத ஓட்டுகளுக்கும் மேல் பதிவாகும் என்று உறுதியாக நம்பின. அதிலும் குறிப்பாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் போன்ற பணப்பயன் அளிக்கும் திட்டங்களால் பெண்கள் அதிக அளவில் பலன் பெற்றுள்ளனர். அதனால் அவர்களது குடும்பங்களின் வாக்குகள் நமக்கே வந்து சேரும். வாக்கு சதவீதம் 80ஐ கடந்து விட்டால், 39 தொகுதிகளிலும் வெற்றியை எளிதில் அறுவடை செய்து விட முடியும் என்று திமுக தலைமை கணக்கு போட்டது.

அதிமுகவோ அதிகமான வாக்குப்பதிவு நடந்தால் 2014 தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டபோது கிடைத்த 45 சதவீத வாக்குகளில் 10 சதவீதம் குறைந்தால் கூட நான்கு முனை போட்டியில் 35 சதவீத ஓட்டுகள் கிடைத்தால் 12 முதல் 15 தொகுதிகளில் வெற்றியை பெற்று விடலாம் அதன் மூலம் அதிமுகவை 2026 தமிழக தேர்தலுக்கு முழு வீச்சில் தயார் செய்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்று கணக்கு போட்டது.

மேலும் இதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட ஏழை மற்றும் பட்டதாரி பெண்களின் திருமணத்துக்கு 25 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம், தாலிக்கு ஒரு பவுன் தங்கம் திட்டத்தை தேர்தல் பிரச்சாரத்தில் மையமாக வைத்தது.
.
டெல்லி பாஜக மேலிடமோ தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்பு அதிரடி அரசியல் மூலம் கட்சிக்கு பெரும் வலு சேர்த்திருக்கிறார். தவிர பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் இருக்கிறார். பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு ஒன்பது முறை வந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பெரும்பாலும் எல்லா தொகுதிகளிலும் வாக்கு சேகரித்தும் விட்டார். இது தவிர ஜே பி நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் போன்ற பல தலைவர்களும் பாஜக கூட்டணிக்காக தமிழகத்தில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தும் விட்டனர்.

இதனால் இனி தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்றாகி விட்டது. 80 சதவீத வாக்குகள் பதிவானால் நமக்கு அதில் 25 கிடைத்தாலே போதும். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் எஞ்சிய 65 சதவீதத்தை பகிர்ந்து கொள்ளும்போது நமக்கு குறைந்த பட்சம் 15 தொகுதிகளில் வெற்றி கிடைத்துவிடும், 2026 தமிழக தேர்தலிலும் இதேபோல் வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியோ வாக்குப்பதிவு சதவீதம் 80ஐ கடந்து விட்டால் நமக்கு எப்படியும் 15 சதவீத ஓட்டுகள் வந்துவிடும், அதன் மூலம் 2026 தேர்தலில் இன்னும் சில சதவீத ஓட்டுகளை அதிகமாக பெற்றோ அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தோ ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போட்டது.

இதற்காகவே தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனல் பறக்க பிரச்சாரமும் செய்தார். இரண்டு தேர்தல்களில் தனது கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட மைக் சின்னத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தும் விட்டார்.

இப்படி நான்கு கட்சிகளும் ஒவ்வொரு விதமாக தேர்தல் கணக்கு போட ஆனால் ஓட்டு சதவீதமோ முந்தைய நாடாளுமன்ற தேர்தல்களை விட மூன்று சதவீதத்துக்கும் மேலாக குறைந்து போய் விட்டது.

அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் 2019 தேர்தலை விட 3 முதல் 7 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி அதி கன மழை பெய்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம்தான் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த வெள்ளத்தால் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் 25 லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்ச ரூபாய் வரை பொருள் இழப்பும் ஏற்பட்டது. ஆனால் மழைநீர் தேங்காதவாறு ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு வடிகால் வசதியை செய்து முடித்திருக்கிறோம். இனி 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவே தேங்காது என்று வெள்ளம் வருவதற்கு முன்பு திமுக அரசு கூறிவந்தது. ஆனால் ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை தாக்குப் பிடிக்கவில்லை.

இந்த கொந்தளிப்பு கூட ஓட்டுப்பதிவு குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். மேலும் சென்னையைப் பொறுத்தவரை அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் என மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என்று இவர்கள் அனைவரும் நம்பினர்.

ஆனால் 2021தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் நிறைவேற்றவில்லை. இந்தக் கோபத்தில் கூட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்யாமல் விட்டிருக்கலாம்.

இது தவிர தமிழகம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக மூன்று சதவீத அளவிற்கு வாக்கு பதிவு குறைந்திருப்பது தற்போது தெரிய வந்து இருக்கிறது. கோவையை பொறுத்தவரை முதலில் 71.17 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு நள்ளிரவில் 64.81ஆக குறைந்துபோனது.

இதற்கு கடுமையான கோடை வெயில், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத அளவிற்கு அரசு பஸ் போக்குவரத்து மிக குறைவாக இயக்கப்பட்டது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டாதது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

குறைவான ஓட்டு பதிவு என்றால் அது பெரும்பாம்பாலான நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்காது என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுவது உண்டு. இருமுனைப் போட்டி என்றால் அது எதிர்க்கட்சிக்கு பெரும் பலனைத் தரும். ஆனால் தமிழகத்திலோ பலத்த மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த அதிருப்தி வாக்குகள் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சம அளவில் பிரிந்தால் திமுக கூட்டணி 34 தொகுதிகள் வரை கைப்பற்றி விடும் வாய்ப்பு உண்டு. அதேநேரம் திமுக அரசு மீதான 70 சதவீத எதிர்ப்பு வாக்குகள் அதிமுக அணிக்கு செல்ல நேர்ந்தால் அக் கூட்டணி 12 முதல் 14 இடங்களை கைப்பற்றி விடும். மாறாக பாஜகவுக்கு 70 சதவீதமும் அதிமுகவுக்கு 30 சதவீதமும் சென்றால் பாஜக கூட்டணிக்கு 4 முதல் 6 இடங்களும், திமுக கூட்டணிக்கு 25 முதல் 27 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 7 முதல் 9 இடங்களும் கிடைக்கும் நிலை ஏற்படும்.

இதனால்தான் என்னவோ திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் திக் திக் மனநிலையில் இருக்கின்றன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதற்கு இன்னும் 45 நாட்கள் இருப்பதால் ஜூன் நான்காம் தேதி வரை இந்த பரபரப்பு அடங்காது என்பது மட்டும் நிச்சயம்.

Views: - 250

0

0