சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் : அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்!!

14 June 2021, 5:01 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், கட்சியின் கொறடா மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

சசிகலாவுடன் உரையாடினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானமாவது :- உழைப்பைச்‌ சுரண்டும்‌ ஒட்டுண்ணிகளாகவும்‌, நற்பெயரை அழிக்கும்‌ நச்சுக்‌ களைகளாகவும்‌ தங்களை வளப்படுத்திக்‌ கொண்ட சிலர்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை அபகரித்துவிடலாம்‌ என்று வஞ்சக வலையை நாளும்‌ விரித்துக்‌ கொண்டிருக்கின்றனர்‌.

சட்டமன்றத்‌ தேர்தலுக்கு முன்பாக, அரசியலில்‌ இருந்து ஒதுங்கி இருக்கப்‌ போவதாக அறிவித்த சசிகலா, இப்போது கழகம்‌ இவ்வளவு வலுவும்‌, பொலிவும்‌, தொண்டர்‌ பெரும்படையும்‌, மக்கள்‌ செல்வாக்கும்‌ பெற்றிருப்பதைப்‌ பார்த்ததும்‌ அரசியலில்‌ முக்கியத்துவத்தைத்‌ தேடிக்கொள்ள, கழகத்தை அபகரிக்கும்‌ முயற்சியில்‌ இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும்‌ தொலைபேசியில்‌ சிலருடன்‌ பேசுவதும்‌, அதை ஊர்‌ அறிய தொலைக்காட்சிகளில்‌ ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்‌.

மகத்தான இரு தலைவர்களின்‌ ஒப்பற்ற தியாகத்தால்‌ ஓங்கு புகழ்‌ பெற்றிருக்கும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ மக்களின்‌ பேரியக்கமாக வரலாற்றில்‌ நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின்‌ அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும்‌ அழித்துக்கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்‌.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சட்ட திட்டங்களுக்கு மாறாகவும்‌, இயக்கத்தின்‌ லட்சியங்களுக்கு விரோதமாகவும்‌ செயல்படுபவர்கள்‌ யாராக இருப்பினும்‌ அவர்கள்‌ மீது தயவு தாட்சன்யமின்றி கடும்‌ நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌ என கடந்த 23.5.2021-ஆம்‌ தேதியிட்ட அறிக்கையின்‌ வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில்‌, சசிகலாவுடன்‌ தொலைபேசியில்‌ உரையாடி, கழகத்தின்‌ வளர்ச்சிக்கும்‌, புகழுக்கும்‌; இழுக்கும்‌, பழியும்‌ தேடியவர்கள்‌ அனைவரையும்‌ கழகத்தில்‌ இருந்து உடனடியாக நீக்க வேண்டும்‌ என்றும்‌; இனி அதுபோன்ற செயல்களில்‌ ஈடுபடுவோர்‌ யாராக இருப்பினும்‌ அவர்கள்‌ அனைவர்‌ மீதும்‌ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என்றும்‌ கழக ஒருங்கிணைப்பாளர்‌, கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌, கழகத்தின்‌ மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 175

0

0