சிறைக்குச் செல்லப்போவது யார்…? OPS கிளப்பும் திடீர் பீதி.. அனல் பறக்கும் அரசியல் களம்..!

Author: Babu Lakshmanan
27 December 2023, 9:15 pm
Quick Share

அதிமுகவிலிருந்து 2022 ஜூலை 11ம் தேதி நீக்கப்பட்ட முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இதுவரை இல்லாத அளவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான தாக்குதலை நடத்தி இருக்கிறார். இது அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு கை கொடுக்குமா? அல்லது காலை வாரி விடுமா?… என்பதுதான் தற்போது பெரும் விவாதத்துக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் விதமாக அப்படி அவர் என்னதான் சொன்னார்?…

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த அதே டிசம்பர் 26 ம் தேதி கோவையில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, “2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 எம்எல்ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. அவர் தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத்திமிரில் இருந்தார் எடப்பாடி. அதனால் ஆட்சி போனது, அடுத்தடுத்த தேர்தல்களிலும் கட்சி தோல்வி கண்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தனியாக நின்றால் ஓட்டுகள் பிரியும். வாபஸ் வாங்கிடுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். அதனால் ஈரோடு கிழக்கில் வாபஸ் வாங்கினேன். ஆனால் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக அங்கு தோற்று போனது. இதனால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம்?…

தனிகட்சி தொடங்கும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. கோரப்பிடியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி மீண்டும் எம்ஜிஆர், ஜெ. ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும். அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவேன். எப்போதும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அவ்வாறு ஆரம்பித்தால் உச்ச நீதிமன்ற வழக்கில் இடையூறு ஏற்படும்.

நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகிறேன். நான் முதலமைச்சராக இருந்தபோது சில தவறுகள் நடந்தன. அப்போது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவுத்து விட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்று விடுவார். அவை அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டு விட்டேன். என்னை திமுகவின் மறைமுக ஆதரவாளர் என்பவர்கள் முட்டாள்கள். நமது அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதை 100 சதவீதம் செய்தால்தான் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்” என்று ஆவேசம் காட்டினார்.

ஓ பன்னீர்செல்வம் பேசியிருப்பதை பார்த்தால், அவர் பக்கம் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை இருப்பது போல தெரியும். ஆனால் கடந்த கால அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும்தான் அவர் பேசியதில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றன என்பது புரியும். பழைய விஷயங்களை மக்கள் எளிதாக மறந்து விடுவார்கள். அதனால் நாம் என்ன சொன்னாலும் அதை அவர்கள் எளிதில் நம்பி விடுவார்கள் எண்ணத்தில் ஒருவேளை ஓபிஎஸ் இப்படி பேசினாரா என்பது தெரியவில்லை.

முதல் முரண்பாடு, 2017 பிப்ரவரி மாதம் அவருடைய முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோது சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியது, ஓபிஎஸ்தான்.
அப்போது அதிமுக ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால் திமுக ஆட்சியை கைப்பற்றி விடும் என்ற ஒரே காரணத்தால்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவின் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார், என்பது ஓபிஎஸ்க்கு நன்றாகவே தெரியும். ஆனால் நான் ஆதரவளித்தால்தான் அதிமுக ஆட்சி காப்பாற்றப்பட்டது, என்று கதை சொல்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் எனது வேட்பாளரை வாபஸ் பெறுவேன் என்பதில் உறுதியாக இருந்த ஓபிஎஸ், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டதற்காக எங்கள் ஆதரவு வேட்பாளரை நிறுத்தவில்லை என்று இப்போது அப்படியே பிளேட்டை மாற்றி போடுகிறார். நாங்கள் வாபஸ் வாங்கிய பிறகும் அதிமுக 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதே என்கிறார். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பென்னாகரத்தில் 2010ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது என்பதை ஓபிஎஸ் தனக்கு வசதியாக மறந்துவிட்டார்.

அந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரிடம் 52 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோற்றதுடன் மூன்றாவது இடத்தை பிடித்து டெபாசிட்டையும் பறிகொடுத்தார் என்பதை ஓபிஎஸ் எப்படி மறந்தார்?…

தவிர ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியாவிலேயே
இதுவரை எந்த மாநிலத்திலும் நடந்திராத வகையில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களை எதிர்க்கட்சியினர் சந்திக்க விடாமல் தங்களது முகாம்களில் 25 நாட்கள் அடைத்து வைத்தும், சுற்றுலா அழைத்து சென்றும், ஒரு ஓட்டுக்கு தினமும்
500 முதல் ஆயிரம் ரூபாய் வரை வாரி வழங்கியதும்தான் திமுக கூட்டணி கட்சியான காங்கிரசின் அமோக வெற்றிக்கு காரணம் என்பது ஓபிஎஸ்க்கு எப்படி தெரியாமல் போனது?…வாக்காளர்களை திமுக இப்படி மிகச் சிறப்பான முறையில் கவனித்து உபசரித்ததை தேர்தல் நடந்த நேரத்தில் ஓபிஎஸ் கண்டிக்க வில்லையே?…

பிறகு எப்படி என்னை திமுகவின் மறைமுக ஆதரவாளர் என்பவர்கள் முட்டாள்கள் என்று ஓபிஎஸ் சொல்கிறார் என்பதுதான் தெரியவில்லை.

இன்னொன்று 2022 ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தபோது ஓபிஎஸ் அதில் கலந்து கொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சூறையாடியதையும், கட்சியின் சொத்து ஆவணங்களை அள்ளிச் சென்ற காட்சிகளையும் டிவி செய்தி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. அந்த காட்சிகள் அதிமுக தொண்டர்களை மன வேதனை அடையச் செய்ததை அவர் எளிதில் மறந்து விட்டாரா?…

எம்ஜிஆர் மாளிகையிலேயே நீங்கள் கை வைத்ததால் தானே அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்வதற்கு காரணமாக அமைந்தது?… இது உங்கள் நினைவிற்கு ஏன் வரவில்லை?…இன்று வீரவசனம் பேசும் நீங்கள் ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமே?….
என்று பல்வேறு கேள்விகளை அதிமுகவின் மீது உண்மையான
பற்று கொண்ட தொண்டர்கள் எழுப்புகின்றனர்.

“திமுகவுடன் எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்று ஓபிஎஸ் கூறுவது கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் முப்பதாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து விட்டு அதை வெள்ளைப் பணமாக மாற்றத் தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவை கடந்த ஏப்ரல் மாதம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு குற்றச்சாட்டு வைத்த நிலையில் சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை எதற்காக 15 நிமிடங்கள் சந்தித்து தனிப்பட்ட முறையில் பேசினார் என்பதற்கான காரணத்தை இதுவரை ஓபிஎஸ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன் என மழுப்புகிறார்.

அது மட்டுமல்ல, சென்னை நகருக்குள் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு அமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் ஓபிஎஸ்ன் மகன் ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் சென்னை ஆடிட்டருக்கு டெல்லியில் இருக்கும் தனது செல்வாக்கை பயன்படுத்தி முப்படைகளின் தடையில்லா சான்றிதழை விண்ணப்பித்த 18 மணி நேரத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ஓபிஎஸ் பெற்றுக் கொடுத்தார் என்றும், இதை மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரியாமலேயே அவர் ரகசியமாக நடத்தி முடித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனால்தான் இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அண்ணாமலையால் தொடர்ந்து முன் வைக்க முடியாமல் போய் விட்டது என்கிறார்கள். இதற்கு ஓபிஎஸ் என்ன பதில் சொல்லப் போகிறார். நல்ல வேளையாக இந்த கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

நான் உண்மைகளை அவுத்து விட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்ல நேரிடும் என்று ஓபிஎஸ் கடுமையாக போட்டு தாக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது, இந்த ரகசியத்தை இதுவரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓபிஎஸ் கூறாமல் இருப்பாரா என்ன?…திமுக அரசும் இதுபற்றி கண்டுகொள்ளாமல் விட்டிருக்குமா?… எனவே போகிற போக்கில் ஓபிஎஸ் வாய்க்கு வந்தபடி ஏதோ பேசுகிறார் என்றுதான் இதை எடுத்துக் கொள்ள முடியும்.

அதேநேரம் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து குவித்த வழக்கில் ஓபிஎஸ்சும் அவருடைய குடும்பத்தினரும் 2012ல் சிவகங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதால் அதை மறைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் இப்படி குற்றச்சாட்டு கூறுகிறாரோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க தனது அமைச்சர் பதவியின் அத்தனை அதிகாரங்களையும் ஓபிஎஸ் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கோர்ட்டில் கருத்தும் தெரிவித்திருக்கிறார்.

எனவே இந்த வழக்கில் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? என்பது சந்தேகம்தான். தனக்கு ஆதரவாக தீர்ப்பு வராத பட்சத்தில் ஓபிஎஸ் மட்டுமின்றி அவருடைய இரு மகன்களான ரவீந்திரநாத்தும், ஜெய பிரதீப்பும் சிறைக்கு செல்வது நிச்சயம்”என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 290

0

0