மிலாடி நபி வாழ்த்து ஓகே… கிருஷ்ண ஜெயந்திக்கு எங்கே வாழ்த்து..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி..

Author: Babu Lakshmanan
18 October 2021, 2:07 pm
Cm stalin - bjp - updatenews360
Quick Share

சென்னை : மிலாடி நபிக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின், கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்..? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக, பொதுவாக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றே எதிர்கட்சியினரால் சொல்லப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக மட்டுமே திமுகவும், அக்கட்சியின் தலைவர்களும் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய, கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின், இந்துப் பண்டிகையை கொண்டாடும் இந்து மக்களுக்கு வாழ்த்துச் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இதனை பிரதிபலிக்கும் விதமாகவே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் நெற்றியில் வைத்த விபூதியை அழித்தது, விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்து விட்டு, பின்னர் அதனை நீக்கிய உதயநிதி ஸ்டாலினின் செயல்களும் தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.

அண்மையில், விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்தது, கொரோனா தொற்று குறைந்த போதிலும் வார இறுதிநாட்களில் கோவில்களுக்கு செல்ல தடை விதித்து இருப்பதும் கூட, திமுகவின் இந்து விரோத போக்கு என்று பாஜகவினர் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினோ, திமுக இந்துக்களுக்குமான கட்சியும் தான் எனக் கூறி வருகிறார். ஆனால், அது எந்த அளவிற்கு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், நாளை இஸ்லாமியர்களின் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான ‘மிலாடி நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்குத் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, இஸ்லாமிய பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின், இந்துக்களின் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்..? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஏன்? கிருஷ்ணர் பிறந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தும், ராமர் பிறந்த நாளில் ராம நவமி வாழ்த்தும் தெரிவிக்க முடியாதா? அதனால் தான் சொல்கிறோம் நீங்கள் “ஹிந்து விரோதி” என்று; இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக வாழ்த்து சொல்லும் மதவாதி என்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் இந்துக்களிடம் பாகுபாடு காட்டுவதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுவாக, கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுகவுக்கு, இந்து மதத்தின் மூலம் பாஜக நெருக்கடி கொடுத்து வருவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

Views: - 186

1

0