2022-ல் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடக்குமா?..: கல்வியாளர்களின் ‘அட்வைஸ்’!!

Author: Aarthi
14 September 2021, 10:34 pm
Quick Share

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு அச்சத்தால் அரியலூரைச் சேர்ந்த அனிதா உள்பட 13 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அண்மையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 12-ம் தேதி நீட் தேர்வு நடந்த நிலையில், அத்தேர்வை எழுதுவதற்கு முன்பாகவே சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வி கண்டதால் இந்த முறையும், தன்னால் வெற்றி பெற முடியாமல் போய்விடுமோ என்று பயந்து அவர் தற்கொலை என்கிற விபரீத முடிவுக்கு சென்று இருக்கிறார். தனுஷின் தற்கொலை, தமிழகத்தில் மீண்டும் நீட் தேர்வு தொடர்பான விவாதத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.

மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்ட துயரமே நீங்காத நிலையில் அடுத்ததொரு தற்கொலையும் நிகழ்ந்துவிட்டது. அதுவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தையே உலுக்கிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட அதே மாவட்டத்தில் மீண்டும் இது நிகழ்ந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் இருவருமே வக்கீல்கள். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த கனிமொழி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 600-க்கு 562.28 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது 93.66 சதவீதம் ஆகும்.

கடந்த12-ம் தேதி தஞ்சையில் உள்ள ஒரு மையத்தில் கனிமொழி நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் அவர் இயற்பியல் பாடத்தை சரிவர எழுதவில்லை என்று கூறப்படுகிறது. தனது தாயாரிடம், இயற்பியல் பாடப்பிரிவில் சில கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறி அவர் புலம்பியும் இருக்கிறார்.

மேலும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற தனது கனவு தகர்ந்து போனதாகக் கருதி கடும் மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனிமொழி தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மகளை பறிகொடுத்த பெற்றோர், அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

2 நாட்கள் இடைவெளியில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் நீட் தேர்வுக்கு பயந்து தங்கள் உயிரை போக்கிக் கொண்டிருப்பது, தமிழக சமூக ஆர்வலர்களையும், கல்வியாளர்களையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேர்வு எழுதாத நிலையில் ஒருவரும், தேர்வு எழுதிய நிலையில் இன்னொருவரும் ‘நீட்’டால் காவு வாங்கப் பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைந்ததும் உடனே நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த சட்டம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரிக்காத வகையில் இருக்கும் என்று கூறி திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்
தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றே பெரும்பாலான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் நம்பினர்.

ஆனால் திமுக அரசு சட்டம் இயற்றுவதற்குள் இந்த ஆண்டு நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இதனால் அரசியலில் சலசலப்பும் எழுந்துள்ளது. அதுவும் மாணவன் தனுஷ், மாணவி கனிமொழி இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் இது தற்போது சமூகப் பிரச்சினையாகவும் உருவெடுத்து விட்டது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு திமுக கூறிய அதே குற்றச்சாட்டை தற்போது அதிமுக தலைவர்கள் சுட்டிக் காட்டுவதற்கு வாய்ப்பாகவும் அமைந்து விட்டது. அதேநேரம் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்களின் பார்வையும் சிந்தனையும் வேறாக உள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது,” நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு இதில் உடனடியாக மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். மாணவர்கள் தற்கொலை எண்ணத்திற்கு செல்லாதவாறு அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்படவேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இறைவன் படைத்த மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும்போது அவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனைகள் வழங்கினால் நிச்சயம் இதுபோன்ற விபரீதங்களை தடுக்க முடியும்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பதுபோல் அவர்களது பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுப்பதும்
மிக அவசியம். ஏனென்றால் அவர்கள்தான் பிள்ளைகளின் மீது தங்களது லட்சியங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றவேண்டும் என்ற நெருக்கடியை உருவாக்குகின்றனர். வலுக்கட்டாயமாக அதை திணிக்கவும் செய்கின்றனர்.
விளையாட்டில் வெற்றி தோல்வி, சகஜம் என்பதுபோல் இதனை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுரை கூற வேண்டும்.

“உச்சி மீது வானிடிந்து  வீழுகின்ற போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!…” என்று மகாகவி பாரதி பாடினான். அத்தகைய கவிஞன் பிறந்த தமிழகத்தில் ஒரு தேர்வுக்கு பயந்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

அதேநேரம் நீட் தேர்வை பொறுத்தவரை அதில் தெளிவான விளக்கத்தைத் தர வேண்டிய பொறுப்பு ஆளும் திமுக அரசுக்கு உள்ளது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை அமையும் விதமாக நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவுடன் சட்டப்பேரவையில் செப்டம்பர் 13-ந்தேதி திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

இந்த தீர்மானம் குறித்து பெரும்பாலான சட்டவல்லுனர்கள், “சுப்ரீம் கோர்ட் அளித்த அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிரான தீர்மானம் இது என்பதால் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மாட்டார், மத்திய அரசும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காது” என்று உறுதிபடக் கூறுகின்றனர்.

அதற்கு உதாரணமாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் பிரபல வக்கீலுமான நளினி, 2017-ம் ஆண்டு நீட் தேர்வு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பின்பு, “இனி யாரும் இந்த சட்டத்தை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது இதுதான் இறுதி தீர்ப்பு” என்று திட்டவட்டமாக கூறியதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத்திய பாஜக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வு நடத்தப்படவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டு நீட் தேர்வு குறித்து இப்போதே தமிழக அரசு தீர்க்கமாக ஒரு முடிவெடுக்கவேண்டும்.

தேர்வு நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி, நீட் தேர்வு நடப்பதாகவே கருதி அதற்கேற்ப மாணவர்களுக்கு தீவிர சிறப்பு பயிற்சி அளித்து, இப்போது முதலே அவர்களை தயார்படுத்தவேண்டும்.

தேர்வு நடக்கவில்லை என்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சி. நடந்தாலும் கூட நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களிடம் வளர்க்க வேண்டும். தோல்வியை சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் மனப்பக்குவத்தையும் உருவாக்க வேண்டும்.

இந்தியாவிலேயே வலுவான சட்டப்பிரிவு அணியை கொண்டதாக திகழும் திமுகவின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. எனவே நீட் தேர்வுக்கு எதிராக இன்னொரு பக்கம் திமுக அரசு தனது சட்டப் போராட்டத்தை
நடத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

தவிர நீட் தேர்வு விஷயத்தை தமிழக கட்சிகள் அரசியல் ரீதியாக அணுகாமல் சமுதாய பிரச்சினையாக கருதினால் மட்டுமே இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதை தடுக்க முடியும்” என்று அக்கறையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 109

0

0