அமைச்சருன்னா என்ன வேணும்னாலும் பேசறதா….? கொந்தளித்த தமிழகம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2023, 9:42 pm
Minister - Updatenews360
Quick Share

அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது சிறுவனை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மாற்றுத்திறனாளி போல விமர்சித்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிர்ப்பு

“ஒரு அமைச்சரே இப்படியெல்லாம் பேசலாமா? அவருடைய பேச்சை எந்தவொரு பெற்றோருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்ற கோபக் கணைகளும் அவர் மீது பாய்ந்து இருக்கிறது.

சுகாதாரத் துறையை கவனித்து வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இது முதல் முறை அல்ல.

படாத பாடுபட்ட அமைச்சர்

ஏற்கனவே கடந்த ஆண்டு சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவி பிரியா மூட்டு பகுதியில் ஏற்பட்ட லேசான சவ்வு கிழிவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருடைய வலது கால் அகற்றப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் உயிரையும் இழக்க நேர்ந்தது. அப்போதும் அமைச்சர் படாத பாடுபட்டார்.

அதேபோல சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் கோதண்டபாணியின் 10 வயது மகள் பிரதிக்ஷாவுக்கு எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு அவருக்கு கால் ஊனம் ஏற்பட்டதும் கண்டனத்திற்கு உள்ளானது.

சளித் தொல்லைக்கு நாய்க்கடி ஊசி

மிக அண்மையில் கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாகரன், தனது 13 வயது மகள் சாதனாவுக்கு ஏற்பட்ட சளித் தொல்லை காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றபோது அவருக்கு பணியில் இருந்த செவிலியர்கள் தவறுதலாக நாய்க்கடி ஊசிகள் போட்டதும் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேதனை தரும் இன்னொரு நிகழ்வும் நடந்து விட்டது.

குழந்தைக்கு கை அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர்-அஜிஸா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் மகிர். இவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில்
கடந்த இரண்டாம் தேதி அவனுடைய வலது கை அழுகிவிட்டதால், அதை மருத்துவர்கள் துண்டித்து அகற்றி விட்டனர்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக டாக்டர்கள் கூறினாலும் அதைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்த தகவல்தான் அவர் மீது சிறுவன் மகிரின் பெற்றோரை ரொம்பவே கொந்தளிக்க வைத்து விட்டது. அது மட்டுமல்ல இந்த விபரீதத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து
போய்விட்டது என்று கூட சொல்லலாம்.

குறைப் பிரசவம் என கூறியதால் சர்ச்சை

“அந்த குழந்தை 32 வாரத்தில் பிறந்திருக்கிறது. குறைப் பிரசவத்தில் பிறந்திருக்கிற குழந்தை என்பதால் பிறக்கும்போதே பல்வேறு பிரச்சினைகளுடன் இருந்துள்ளது. அதனால்தான் குழந்தை வளர்ச்சியே அடையாமல் இருக்கிறது. தற்போது கூட இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவில்தான் உள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதுதான் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் கணைகள் பாய்வதற்கு காரணம் ஆகிவிட்டது.

எந்தவொரு பெற்றோருமே, தங்களது குழந்தையைப் பற்றி பொதுவெளியில் கடுமையான விமர்சனங்கள் வைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதைக் கேட்டால் இயல்பாகவே அவர்களுக்கு வேதனையுடன் கடும் கோபமும் சேர்ந்தே வரும். அதற்கு தஸ்தகீர்-அஜிஸா தம்பதியினரும் விதிவிலக்கல்ல.

கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் குழந்தையின் தாய் அஜிஸா விளக்கம் அளித்தபோது ஆவேசம் பொங்கியதைக் காண முடிந்தது.

குழந்தையின் தாய் வேதனை

அவர் மனம் நொந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால்தான் என மகன் வலது கையை இழந்து விட்டான்.
இனி யாரும் இந்த தவறை மறந்தும் செய்து விடக் கூடாது.

எந்த தாயிடமும் குறை மாதக் குழந்தை என்று வார்த்தையை உபயோகிக்க கூடாது. ஆனால் அமைச்சர் மா. சுப்பிரமணியம் அய்யா அவர்கள் மீண்டும் மீண்டும் பலமுறை எனது குழந்தையை குறைமாத குழந்தை, குறைந்த எடை உடைய குழந்தை என்று குறிப்பிட்டார். இந்த வார்த்தைகளை கேட்டு ஏற்கனவே மனம் உடைந்து போயிருந்த நான் மேலும் நொறுங்கிப் போனேன். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் யாருமே நன்றாக வளர்ந்தது இல்லையா?…

கடந்த 26-ம் தேதி இரண்டு கையுடன் நல்ல நிலையில்தான் என் மகனை இங்கே கொண்டு வந்தேன். இன்று என் மகனை ஒற்றைக் கையுடன் பார்க்கிறேன். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்கவேண்டும்.

என் மகனுக்கு நடந்த அநீதி போல் யாருக்கும் நடக்கக்கூடாது. என் மகனுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுவரை நான் போராட்டத்தை தொடருவேன். நான் பணத்துக்காக இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. என் குழந்தைக்கு ஏற்பட்ட அவலத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் ஒரு தாயாக போராடுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

கழுவி ஊற்றிய முன்னாள் அமைச்சர்கள்

இந்த நிலையில்தான் தொடர்ந்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மகிரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரும், டாக்டர் விஜயபாஸ்கரும் நேரில் பார்த்துவிட்டு, அவனது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். பின்பு செய்தியாளர்களிடம் அவர்கள் பேசும்போது அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேசியதை கழுவி ஊற்றவும் செய்தனர்.

ஜெயக்குமார் கூறும்போது, “குழந்தையை பார்த்த பிறகு எங்களுக்கு கண்ணீரே வந்து விட்டது. மனதே சங்கடமாக இருக்கிறது. அந்த தாயின் வேதனை எப்படி இருக்கும்? தந்தையின் வேதனை எப்படி இருக்கும்? அதை புரிந்து கொள்ளாமல் தாயின் கருத்தை கூட அமைச்சர் விமர்சனம் செய்வது மிகவும் வேதனையும் வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று ஆவேசப்பட்டார்.

டாக்டர் என்பதால் விஜயபாஸ்கரின் கருத்து இன்னும் வலுவாக இருந்தது. “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 600 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைகளை கூட நன்றாக பராமரித்து அவர்களை எந்த குறைபாடும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் சிகிச்சையும் அளித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சிறுவனுக்கு கை பாதிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்களால் கண்டறிந்து இருக்க முடியும். முற்றிலும் இது தவிர்த்து இருக்கப்பட வேண்டிய நிகழ்வு. இது முற்றிலும் அரசின் குற்றம். இது துறையினுடைய குற்றம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குழந்தையையும் தாயையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியிருக்கிறார். இது ஏற்புடையது அல்ல. இந்த சம்பவத்திற்கு அதிமுக சார்பில் மிகக்கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

சமூக நல ஆர்வலர்களும், “அமைச்சர் மா சுப்பிரமணியம், கை அகற்றப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு மன வேதனை அளிக்கும் விதமாகத்தான் பேசியிருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வார்த்தைகளை அவர் கண்டிப்பாக தவிர்த்து இருக்கவேண்டும். இனிமேல் இதுபோல யாருடைய உள்ளமும் புண்படாமல் அவர்
பேச கற்றுக் கொள்ளவேண்டும்” என்கின்றனர்.

“மருத்துவ ரீதியாக விளக்கம் அளிப்பது போல் நினைத்துகுழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததை அமைச்சர் ஒரு காரணமாக குறிப்பிடுகிறார். இது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று. ஏனென்றால் பிரச்சனையிலிருந்து தப்புவதற்காக அந்தக் குழந்தையை மாற்றுத் திறனாளி என்ற கோணத்திலேயே அவர் பார்ப்பதாகவே தெரிகிறது.

செந்தில்பாலாஜியை காவேரிக்கு மாற்றியதற்கு காரணம் இதுவோ?

இத்தனைக்கும் அந்தக் குழந்தை 32 வாரங்களில் பிறந்துள்ளது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று கூறிவிட முடியாது. தவிர இன்று பெரும்பாலான குழந்தைகள் 36 முதல் 38 வாரங்களிலேயே பிறந்து விடுகின்றன. ஒரு சில கர்ப்பிணிகளுக்கு வேண்டுமென்றால் 40 வாரங்கள் வரை ஆகலாம். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொண்டால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், திடகாத்திரமாகவும் வளர்ந்து விடுவார்கள். எனவே குறை பிரசவத்தில் பிறந்ததை ஏளனம் செய்வதுபோல அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது தவறானது.

அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாரோ என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான் என கருதத் தோன்றுகிறது” என்கின்றனர், அந்த சமூக நல ஆர்வலர்கள்.

Views: - 298

0

0