குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய திமுக சகோதரர்கள் : மகளின் இறப்பில் நீதி கிடைக்க சிபிஐ விசாரணை கோரும் தாயார்..!

21 July 2020, 2:37 pm
DMK updatenews360
Quick Share

செங்கல்பட்டு : இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து 4 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்ததாக திமுக நிர்வாகி மற்றும் அவரது சகோதரர் மீதான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இளம்பெண்ணின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குளத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இளம்வயது பெண்ணான இவர், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்த அவரை, தொடர்ந்து கண்காணித்து வந்த திமுகவின் இளைஞரணி செயலாளர் தேவேந்திரன், தனது சகோதரன் புரஷோத்தமனுடன் சேர்ந்து, தக்க சமயம் பார்த்து சசிகலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இந்த கொடூரமான சம்பவத்தை ஈவு இரக்கமற்ற சகோதரர்கள் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர், தங்களுக்கு தோனும் போதெல்லாம், தங்களின் காம இச்சைக்கு இணங்க வேண்டும் என்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். ஆனால், இதற்கு சசிகலா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரன் புரஷோத்தமன், சசிகலாவை, அவரது வீட்டிற்கே சென்று, அவரது ஆபாச படத்தை காட்டி மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அவர் வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், இளம்பெண் சசிகலாவை, தேவேந்திரனும் அவரது சகோதரன் புரஷோத்தமனும் அடித்து கொலை செய்துவிட்டு, இதனை தற்கொலை என நாடமாக்க, வீட்டிலேயே சடலத்தை தூக்கில் தொங்க விட்டதாக சசிகலாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திமுக நிர்வாகி தேவேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது சகோதரர் பிருஷோத்தமனும் சரணடைந்து விட்டார். இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, திமுகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து தேவேந்திரன் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், தனது மகளின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சசிகலாவின் தாயார் சந்திரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குளிப்பதை வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்தது, மரணம் விளைவித்தது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யாமல், வெறும் தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் தப்பிக்க வைக்கும் முயற்சி எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.