டெக்ஸ்டைல் இயந்திரம் வாங்குவதில் ரூ.33 லட்சம் மோசடி: பணத்தை மீட்டு தரக்கோரி தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 5:25 pm
Quick Share

கோவை: டெக்ஸ்டைல் இயந்திரம் விற்பனை செய்வதாக கூறி ரூ.33 லட்சத்தை பெற்றுக்கொண்டு தனியார் மில் அதிபர் ஏமாற்றுவதாக கோவையை சேர்ந்த தம்பதியினர் புகார் அளித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் வேலுமணி, பாலசுந்தரம் தம்பதியினர். இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து இந்த தம்பதியினர் அலுவலக நுழைவுவாயில் முன்பு திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது கணவரும் டெக்ஸ்டைல் இயந்திரம் வாங்க எண்ணி வங்கியில் 33 லட்சம் ரூபாய் கடன் பெற்று வி.வி காட்டன் மில் முதலாளி தங்கவேலு மற்றும் அவரது மகனிடம் பணத்தைக் கொடுத்தோம்.

ஆனால் எங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு இயந்திரத்தை விற்று எங்களை மோசடி செய்துள்ளார். இது குறித்து நாங்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தோம். அப்போது விசாரணைக்கு ஆஜரான தங்கவேலு இரண்டு தவணைகளில் எங்கள் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்.

ஆனால் இதுவரை எங்களது பணத்தை திரும்பக் கொடுக்க வில்லை. தினமும் பணத்திற்காக நடந்து வருகிறோம். வங்கியில் வாங்கிய கடனுக்கு மாதத்தவணை கட்ட முடியாத சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களை ஏமாற்றியவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். தற்கொலை செய்யும் அளவிற்கு சூழ்நிலைக்கு சென்றுள்ளோம். எனவே எங்களை ஏமாற்றிய தங்கவேலு மற்றும் அவரது மகன் சூர்யா இருவரையும் கைது செய்து எங்களது பணத்தை திரும்ப பெற வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Views: - 125

0

0