கோவைக்குள் நுழைவதற்கு 1.37 லட்சம் பேருக்கு ‘இ-பாஸ்’.!

11 August 2020, 8:28 pm
Quick Share

கோவை: வெளியூர்களில் இருந்து கோவை வருவதற்காக விண்ணப்பித்தவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 734 பேருக்கு ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்திற்குள் ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்வதற்கு tnepass.tnega.org என்ற இணையதள முகவரி மூலமாகவும், மற்ற மாநிலங்களில இருந்து தமிழகத்திற்குள் நுழைவதற்கு rtos.nonresidenttamil.org என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பித்தும் ‘இ-பாஸ்’ பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

‘இ-பாஸ்’ பெற்றுத்தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மத்திய அரசு கைவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநிலங்களிலும் இந்த முறை தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ‘இ-பாஸ்’ விண்ணப்பித்து பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ‘இ-பாஸ்’ வழங்குவதில் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதால் மக்கள் அவதிப்படுவதாகவும் எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், கோவை மாவட்டத்தில் ‘இ-பாஸ்’ வழங்கும் நடைமுறையில் எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைவதற்காக 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 734 ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3 லட்சத்து 54 ஆயிரத்து 425 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 6 ஆயிரத்து 659 விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன.

இதில், பொதுப்போக்குவரத்து மூலம் வந்த 25 ஆயிரத்து 414 பேருக்கும், அரசு பணிகள் மற்றும் டெண்டர் எடுத்தவர்கள் என 932 பேருக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்காக 9 ஆயிரத்து 891 பேருக்கும், தொழில் முறை பயணமாக 24 ஆயிரத்து 938 பேருக்கும், உறவினர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 4 ஆயிரத்து 411 பேருக்கும், மருத்துவ அவசரத்திற்காக 44 ஆயிரத்து 622 பேருக்கும் ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிறு வியாரிகள் மற்றும் தொழிலகங்களில் 3 ஆயிரத்து 23 பேருக்கும், ஆயிரத்து 130 மாணவர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா மற்றும் வழிபாட்டிற்கு சென்ற 324 பேருக்கும் என இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 734 ‘இ-பாஸ்’ விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ‘இ-பாஸ்’ நிராகரிக்கப்பட்ட ஒரே நபர் மீண்டும்-மீண்டும் விண்ணப்பித்த காரணத்தினால், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 8

0

0