நிதி நிறுவன மோசடி: மூளையாக செயல்பட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை…ரூ.4.76 கோடி அபராதம்..!!
Author: Aarthi Sivakumar4 October 2021, 7:56 pm
கோவை: நிதி நிறுவனம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட செல்லமுத்து என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 கோடியே 76 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு அன்னை இன்போடெக், அன்னை லைப் பிரோமோட்டர்ஸ், அன்னை ட்ரேடிங் மார்க்கெட்டர்ஸ், அன்னை ஹெல்த் அப்லூயன்ஸ், அன்னை வெல்த் ரிசோர்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து, அவரது மனைவி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் இணைந்து நிதி நிறுவனம் துவங்கியுள்ளனர்.
இதில், செலுத்தும் பணத்திற்கு 24 சதவீதம் வட்டியுடன், கணினி சார்ந்த பணியும் வழங்கப்படும் என கூறி அன்னை இன்போடெக் என்ற நிறுவனம் பெயரில் கடந்த 2009ல் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி, நாமக்கல், ஈரோட்டை சேர்ந்தவர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால், விளம்பரபடுத்தியதை போல உரிய வட்டி, அசல் தொகையையும் திருப்பி அளிக்காததால், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசு என்பவர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், இந்த 8 நிறுவனங்களும் மோசடியில் ஈடுபட்டதும்,118 முதலீட்டாளர்களிடம் ரூ.4 கோடியே 73 லட்சத்து 94 ஆயிரத்து 803 மோசடி செய்தது தெரியவந்தது.
மோசடி, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 2010 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 கோடியே 76 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், 4 கோடியே 75 லட்சத்தை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தவிர, வழக்கில் சேர்க்கப்பட்ட செல்லமுத்துவின் மனைவி உட்பட மேலும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
0
0