கடத்த முயன்ற ரூ.1000 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

20 April 2021, 9:31 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியே மரத்தடிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.1000 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியே தினசரி பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கும், சிங்கப்பூர் மலேசியா, சீனா, பனாமா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் நேரடி வர்த்தக சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் ஒன்றில் கண்டெய்னர் மூலமாக கொக்கைன் போதை பொருள் கடத்தவிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, புலனாய்வுத்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரேசிலில் இருந்து இலங்கை வழியாக தூத்துக்குடிக்கு 8 சரக்கு பெட்டகங்களில் மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பல் உள்ளே நிறுத்தப்பட்டிருந்தது. மரத்தடிகள் கொண்டுவரப்படட்ட 8 சரக்கு பெட்டகங்களில் 6 பெட்டிகள் டி.எஸ்.ஏ. தனியார் நிறுவனத்துக்கும், 2 பெட்டிகள் நவசேவா எனும் தனியார் நிறுவனத்துக்கும் வந்துள்ளது. இதில் டி.எஸ்.ஏ. நிறுவனத்துக்கு வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் மரத்தடிகள் மத்தியில் 9 கருப்பு நிற பேக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. 9 பேக்குகளில் மொத்தம் 400 கிலோ எடையுள்ள கொக்கைன் போதை பொருள் இருப்பது சோதனையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அனுப்பியவர் மற்றும் தூத்துக்குடியில் அதை பெறுபவர் முகவரிக்கொண்டு விசாரணை நடத்தினர்.தூத்துக்குடியில் “சக்தி டிம்பர்ஸ்” எனும் முகவரிக்கு வந்திருந்ததை தொடர்ந்து விசாரிக்கையில், அந்த முகவரிகள் போலியானவை என கண்டுப்பிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருளின் மதிப்பு சர்வதேச அளவில் சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் இருக்கும் எனக்கூறபப்படுகிறது.இதுகுறித்து, மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 36

0

0