காரில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல் : வெளி மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

13 July 2021, 11:34 pm
Quick Share

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 110 கிலோ கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அடைக்கலாபுரம் அருகே வெளி மாநில பதிவெண்களை கொண்ட இரு சொகுசு கார்களை சோதனையிட்டபோது அதில் ரூ 15 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 110 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அஸ்வின் , ஆசிர் , சியாமனிஷ் , சாய்கணேஷ் உள்ளிட்ட நான்கு வெளிமாநில இளைஞர்களை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தி கஞ்சா பொட்டலங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடத்தி வந்த தடைசெய்யப்பட்ட கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 189 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை கஞ்சா கடத்திய குற்றத்திற்காக 8-பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Views: - 103

0

0