13 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் ஆம்பர் எனப்படும் கொழுப்பு பறிமுதல்: 9 பேர் கைது

Author: kavin kumar
20 August 2021, 6:56 pm
Quick Share

காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே 13 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் ஆம்பர் எனப்படும் கொழுப்பை விற்பனை செய்ய முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உடம்பில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பான ஆம்பர் என்ற பொருளை விற்பனை செய்வதற்காக கிருஷ்ணகிரி மற்றும் கடலூரை சேர்ந்த 9 பேர் சேர்ந்த கும்பல் திருப்போரூரில் சந்திக்கப் போவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண், சென்னை வனச்சரக அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட வன காவலர்கள் மாறுவேடத்தில் சென்று 3 பேர் கொண்ட கும்பலை முதலில் வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து ஒரு கும்பல் ஆம்பர் வாங்க வருவதாக தெரியவந்தது. அந்த கும்பலை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து தங்களிடம் சிக்கிய ஒருவர் செல்போனில் பேசி பேசிய வரவழைத்து அவர்களை மேலக்கோட்டையூர் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மோகன்தாஸ், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த அருள்முருகன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ், தாம்பரம் அடுத்த வெங்கபக்கத்தை சேர்ந்த டேனியல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆதித்யா, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜன், நெற்குன்றத்தை சார்ந்த முருகன், பூந்தமல்லி அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த மோகன், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடமிருந்து 13 கிலோ ஆம்பர், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆம்பரின் மதிப்பு சுமார் 13 கோடி ரூபாய் என வன அலுவலகர்கள் தெரிவித்தனர்.

Views: - 245

0

0