கோவையில் இன்று முதல் 186 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

13 November 2020, 7:55 pm
Quick Share

கோவை: கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இன்று முதல் 186 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கோவையில் இருந்து அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 186 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.இதனிடையே, நேற்று பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் கோவை திரும்ப வரும் 16ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0