ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 22-வது ஆண்டு தினம் : பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு!!

Author: Babu Lakshmanan
24 June 2021, 6:55 pm
isha yoga centre - updatenews360
Quick Share

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 22-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த 21 ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன.

தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது.

இதைத் தொடர்ந்து ‘புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி’, ‘அஉம் தாரே தூரே தூரே ஸ்வாஹா’, ‘நமோ ரத்னா த்ராயா’ போன்ற புத்த மத உச்சாடனைகளை ‘சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அர்ப்பணித்தனர்.

பின்னர், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, ரோம், போர்ச்சுகீஸ், ரஷ்யன், கிரீக், எத்தியோப்பியன், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அடங்கிய கிறிஸ்தவ பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் அர்ப்பணித்தனர்.

இதேபோல், அமெரிக்க பழங்குடி மக்களின் பாடல்கள், தென் ஆப்பிரிக்க மந்திர உச்சாடனை, சூஃபி சமய பாடல்கள் போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன.

அத்துடன் ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடாகம்’,‘குரு பாதுக ஸ்தோத்ரம்’ ஆகிய 2 சக்திவாய்ந்த மந்திரங்களின் உச்சாடனைகளும் நடைபெற்றன. தேவார பாடல்கள் பாடப்பட்டன. இந்த உச்சாடனைகளில் ஈஷா ஆசிரமத்தில் வசிப்பவர்கள் பங்கேற்றனர். மாலை 6.10 மணிக்கு ‘நாத ஆராதனை’ எனும் இசை அர்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவுப் பெற்றது.

ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு, கொரோனா சூழல் காரணமாக ஈஷா யோகா மையம் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, மந்திர உச்சாடனைகள் ஆடியோ வடிவில் ஆன்லைன் மூலம் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

Isha Yoga-Updatenews360

ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும் உச்ச நிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம் எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்த் தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இது தான் உலகிலியே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 211

0

0