விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இருவர் கைது

28 January 2021, 3:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இருவரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஒரகடம், ‘சிப்காட்’ பகுதியில், ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, வட மாநிலத்தாரும், பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர், இப்பகுதியில் தங்கியும் பணிபுரிகின்றனர். இதனால், ஒரகடம் சுற்றியுள்ள பகுதிகளில், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக பிற மாநிலத்திலிருந்து கஞ்சா கிலோ கணக்கில் கடத்தி வரப்படுவதாக போதை பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் போதைப்பொருள் கடத்தல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் டெல்லி பாபு தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து 23 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி சேர்ந்த பவன்குமார் மற்றும் பானு பிரகாஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0