சேற்றில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
24 March 2021, 11:23 pm
Quick Share

அரியலூர்: மணப்பத்தூர் ஓடை நீரில் உள்ள சேற்றில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் மற்றும் இவரது சகோதரர் ஜெயசீலன் ஆகியோரது வீடுகள் அருகருகே இருப்பதால் இருவருடைய குடும்பத்தின் குழந்தைகளும் ஒன்றாகவே விளையாடுவது சாப்பிடுவது என்று இருந்தனர். இந்நிலையில் சுதாகரின் தாயார் வளர்மதி இன்று தங்களது ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்காக சென்றிருந்தார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சுதாகர் மகள் அதே பகுதி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சுடர்விழி ஜெயசீலன் மகன் ரோகித் (07) மகள் சுருதி (08) ஆகிய 3 பேரும் காலையில் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்ற பாட்டியை காணாமல் பக்கத்தில் உள்ள காடுகளுக்கு தேடிச் சென்றுள்ளனர்.

அப்பொழுது குறுக்கே உள்ள சின்ன ஓடையில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை தாண்டி செல்வதற்காக மூன்று பேரும் ஓடையில் இறங்கியுள்ளனர். ஆழம் அதிகமாக இருந்ததால் மூன்று குழந்தைகளும் நீருக்குள் மூழ்கி காணாமல் போனார்கள். பின்னர் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் பெற்றோர்கள் குழந்தைகளை தேடி சென்றுள்ளனர். அப்போது சின்ன ஓடையில் கரையோரத்தில் குழந்தைகள் செருப்பு மற்றும் துண்டுகள் கிடந்ததை அடையாளம் கண்டு தேடிப்பார்த்துள்ளனர். இதனையடுத்து குவாகம் காவல்துறையினர் மற்றும் செந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு,

தீயணைப்பு துறையினர் நீருக்குள் இறங்கி 3 குழந்தைகளையும் சடலமாக மீட்டு, உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து குவாகம் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். மூன்று பள்ளி குழந்தைகள் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 70

0

0