தனியார் பேக்கரியில் கேக் சாப்பிட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

9 September 2020, 10:11 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் பேக்கரியில் கேக் சாப்பிட மூன்று குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள பிரவீன் என்ற தனியார் பேக்கரி உள்ளது. தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்த அவசர ஊர்தியின் மருத்துவ உதவி ஆய்வாளர் சுரேந்திரன் தன்னுடைய குழந்தைக்கு கேக் வாங்க பேக்கரிக்கு சென்றார். நண்பர் விமல் ராஜ்ஜியும் தனது குழந்தைக்காக அந்த பேக்கரியில் பிளம் கேக் வாங்கினர் . சுரேந்திரன் தன்னுடைய 3 வயது குழந்தை சிரில் என்பவனுக்கு அளித்துள்ளார். அதேபோல் விமல் ராஜ்ஜும் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தை சுஸ்சீனா மற்றும் 5 வயது சிறுவன் ரூபன் ஆகியோர்களுக்கு கேக் அளித்துள்ளார்கள்.

சாப்பிட்ட மூன்று குழந்தைகளும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பேக்கரியின் உரிமையாளர் அச்சம் அடைந்து கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். சண்டை சச்சரவு ஏற்படாமலிருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 31 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் 28 வயது வாலிபர் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில்,

மேலும் இன்று மூன்று குழந்தைகள் உட்கொண்ட உணவு நஞ்சாகி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு முன்பாக உணவகங்கள் பேக்கரிகள் உள்ளிட்ட உணவு வகை சார்ந்த நிறுவனங்களில் பயன்படுத்திவந்த அரிசி, பருப்பு, மாவு, எண்ணெய், மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட உணவு சார்ந்த பொருட்களை தற்சமயம் ஊரடங்கு தளர்வு முடிந்தபிறகு அதன் காலாவதி நிலைமையை கருத்தில் கொண்டு அதை அப்புறப்படுத்த வேண்டும் .

ஆனால் ஊரடங்கு சமயத்தில் எந்த ஒரு வருமானமும் இல்லாத காரணத்தினால் மிகுந்த நஷ்டத்தில் உள்ள சில தனியார் உரிமையாளர்கள் ஊரடங்கு தளர்வு முடிந்தவுடன் மீண்டும் புதிதாக வாங்கிய உணவு பொருட்களுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு இருப்பு வைத்திருந்த உணவு பொருட்களையும் சேர்த்து கலப்படம் செய்து பயன்படுத்தி அதன் ஆபத்தை உணராமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களும் கடைக்காரர் கொடுப்பதை நம்பி சிறியவர் முதல் பெரியவர் வரை உணவை உட்கொள்கிறார்கள். இதனால் பலருக்கும் உணவு நஞ்சாகி உடல் உபாதை ஏற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பிரத்தியேக குழு அமைத்து உணவு சார்ந்த பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இடையே ஆய்வு மேற்கொண்டு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக அதை தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 8

0

0