சூனியக்காரர் என நினைத்து வாலிபர் மீது பொட்ரோல் ஊற்றி ஏறித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Author: Udayaraman
28 July 2021, 7:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சூனியம் வைக்க வந்தவர் என்ற சந்தேகத்தில் வாலிபர் மீது பொட்ரோல் ஊற்றி ஏறித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி பிரட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார். இவர் கட்டிடங்களுக்கு செண்டரிங் செய்யும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு அவர் தூங்குவதற்காக இடம் தேடி அலைந்த போது மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையம் உள்ளே சென்று தூங்க முயற்சித்துள்ளார். இதனை பார்த்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அவரை அங்கிருந்து கிளம்பும்மாறு கூறியதை அடுத்து ஊழியர்களுக்கும் சதீஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர்களான மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலையை சேர்ந்த ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ராஜேந்திரனின் மகன்களான ராஜவரதன், ராமாமவுரியா ஆகியோர் சதீஷ்குமார் சூனியம் வைப்பவர் போல் உள்ளார்.

எனவே அவர் இவர்களுக்கு சூனியம் வைக்க வந்ததாக நினைத்து, அவரிடம் யார் உன்னை அனுப்பியது? என கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு சதிஷ்குமார் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் சதீஷ்குமாரை மிரட்டுவதற்காக அவர் மீது பெட்ரோலை ஊற்றியுள்ளனர். மேலும் தீ குச்சியை கிழித்து வைத்துக்கொண்டு உண்மையை சொல்லவில்லை என்றால் கொளுத்திவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக தீக்குச்சியில் இருந்த தீ சதிஷ்குமாரின் உடலில் பற்றியது. இதில் சதீஷ்குமார் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். உடனே பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தீயை அணைத்துள்ளனர்.

பின்னர் சதீஷ்குமார் காயங்களுடன் சாலையில் சென்றுள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அவர்களின் நண்பர் மற்றும் ஊழியர்கள் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். அதில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ராஜவரதன், ராஜமவுரியா, குமார், சிவசங்கர் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இதில் தலைமறைவாக இருக்கும் மேலும் 3 பேரை போலிசார் தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜா மவுரியா புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 462

0

0