ரேசன் கடைகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

Author: Udayaraman
5 August 2021, 7:52 pm
Quick Share

வேலூர்: தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தனர். பின்னர் மாவட்ட உணவு பாதுகாப்பு உணவு வழங்கல் துறை சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது;- வேலூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் அரசு சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ. 4000 மற்றும் 14 வகையான பொருட்கள் 99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.தமிழகத்தில் இதுவரை 7 லட்சம் பேர் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 3.50 லட்சம் பேருக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் இந்த மாதம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.தமிழகத்தில் 2,600 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு 44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுக்க ஒரு ஏ.டி.ஜி.பி போலீஸ் சூப்பிரண்டுகள் 2 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழகத்திற்கு 28,000 கேஎல் மண்ணெண்ணை தேவைப்படுகிறது ஆனால் மத்திய அரசு 7500 கேஎல் மட்டுமே வழங்கி வருகிறது. தொடர்ந்து மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகின்றனர்.தமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என முதல்அமைச்சர் மூலம் வலியுறுத்துவோம்.தமிழகம் முழுவதும் 8000 ரேசன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இந்த 8000 கடைகளுக்கு சொந்தமாக கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும்.மேலும் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இவர் அவர் கூறினார்.

Views: - 361

0

0